Thursday, October 13, 2011

அன்றொரு நாள்: அக்டோபர் 1

அன்றொரு நாள்: அக்டோபர் 1


‘குடவோலை’, ‘குடவோலை’ என்று கதைத்தே, காலத்தை ஓட்டி விட்டோம், ஏதோ நம் நாட்டு குறுநில மன்னர்கள், குடியரசு, மக்களாட்சி, ஜனநாயகம் ஆகிய அரசியல் பண்புகளை, இவ்வுலகுக்கு வாரி வழங்கிய மாதிரி. உத்திரமேரூரில் முதல் பராந்தகன் சோழன் காலத்தில் (கி பி 919/921) உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் கிராம நிர்வாகம் குடவோலை முறைப்படி நடைபெற்று வந்ததாக, வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டு மூலம் அறிகிறோம். பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. மனையும், நிலமும், நீச்சும் இல்லையெனில் வாக்குரிமை கிடையாது. வயது 35 ~70. ஒழுக்கமும், கறார் கணக்கும் தகுதிகள். ஒரு வாரியத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நியமனம் கிடையாது. நியமிக்கப்பட்டவர்களின் பெயர்கள் ஓலை நறுக்குகளிலெழுதி ஒரு குடத்தில் இடப்படும். பிறகு அவை நன்கு குலுக்கப்படும். பிறகு ஒரு சிறுவனை அழைத்து எத்தனை உறுப்பினர்கள் தேவையோ அத்தனை ஓலை நறுக்குகள் எடுக்கப்படும். அவற்றில் உள்ள பெயர்கள் உரக்கப் படிக்கப்பட்டு அவர்கள் சபையின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவர். இதுவே குடவோலை முறையாகும். அரசனை தெய்வாம்சமாகக் கருதிய காலகட்டத்தில், இது மெச்சப்படவேண்டியது தான். ஆனால், இதை தற்காலத்து நாடு தழுவிய பொது தேர்தல் முறைக்கு இணையாக சொற்மாரி பொழிவது இம்மி அளவு கூட பொருத்தமில்லாத ஒப்புமை. இவ்வாறு எழுதிய பிறகு பார்க்கக்கிடைத்த முனைவர் நா.கணேசனின் 27 09 2011 இடுகையை, இடம், பொருள், ஏவல் கருதி, மரியாதையுடன், இணைத்துள்ளேன்.


ஜனநாயகம் நேரடியாகவும் இருக்கலாம்; பிரதிநிதித்துவம் மூலமும் இருக்கலாம். இந்தியாவில் பிரதிநிதிகள் தடம் மாறி, தடுமாறி, நிதி தேடி, மக்களுக்கு பிரதியுபகாரத்துக்கு பதிலாக பிரதி அபகாரம் செய்து வருகிறார்களே என்ற பரிதாபத்தை எங்கு சொல்லி புலம்புவது?. தேர்தலில் புலப்படும் ‘வாக்குக்கரிசி’ முறைகேடுகளுக்கு ‘திருமங்கல சூத்ரம்’ என்ற செல்லப்பெயர் வேறு. இத்தருணம் Election, Initiative, Referendum, Recall, Plebiscite (தேர்தல், மனுப்போட்டு நிவாரணம் கோருவது, மக்கள் மாக்களாக மாறி துணிவுடன் களம் இறங்கி பொது நலனை வற்புறுத்தி பெறுவது, தேர்தலில் கெலித்தபின் மக்களை உதறும் ‘நிதிபிரதிகளை’ வீட்டுக்கு அனுப்புவது, பொதுஜன அபிப்ராயத்தை நிலை நாட்டுவது) போன்ற குடியரசு என்ற வில்லில், உரிமை என்ற நாணேற்றி, விரைந்து பாயும் கணைகளை பற்றி சற்றே பார்ப்போம். இன்றைக்கு இதற்கு என்ன தனிச்சிறப்பு என்று கேட்டால், பதில்:

அக்டோபர் 1, 1982 அன்று இத்தகைய கணை ஒன்று ஒரு ஜெர்மன் அதிபரை இறக்கி, மற்றொருவரை அரியணையில் அமர்த்தியது. அந்த நிகழ்வு தரும் செய்தி யாதெனில்,நேரடி ஜனநாயகம், பிரதிநிதித்துவம் என்றெல்லாம் பேசிப்பேசி காலத்தை விரயம் செய்யாமல், ஆக வேண்டிய காரியத்தை பார் என்பதே.

நடந்தது என்ன? ஜெர்மனியில் 1919த்திய வீமார் ரிபப்ளிக் சாஸனம் ஜனாதிபதியை விலக்க வழி வகுத்தது; மற்றொருவரை அமர்த்த வழி வகுக்கவில்லை. குழப்பம்; தலைகள் பல உருண்டன. ஹிட்லர் தலை தூக்கி நாஜிக்கட்சியை துவக்க, குழி தோண்டியது, இந்த நிலையில்லா சூழல் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது உண்டு. இதற்கான மாற்று மருந்து 1949த்திய அரசியல் சாஸனத்தில் வைக்கப்பட்டது. விலி ப்ரேண்ட் என்ற ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஏப்ரல் 27, 1972 அன்று நிறைவேற்றப்பட்டாலும், 48 மணி நேரத்திற்குள் மற்றொருவரை பார்லிமெண்ட் தேர்ந்து எடுக்காததால், விலி ப்ரேண்ட் தொடர்ந்து பணி ஆற்றினார். அக்டோபர் 1, 1982 அன்று ஹெல்மெட் ஷ்மிட் என்ற ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிறைவேற்றப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஹெல்மட் கோஹ்ல் என்பவரை பார்லிமெண்ட் தேர்ந்து எடுத்ததால், நட்டாற்றில் புரவியை மாற்றமுடிந்தது. இந்த வழிமுறைக்கு Constructive Vote of No Confidence (கூடு விட்டு கூடு பாயும் தன்மையுடைய நம்பிக்கையில்லா தீர்மானம்!) என்று பெயர்.

Constructive Vote of No Confidence (கூடு விட்டு கூடு பாயும் தன்மையுடைய நம்பிக்கையில்லா தீர்மானம்!) பிரதிநிதித்துவமுறையில் தான் ஜெர்மனியில் பயன்பட்டது. (அதை பற்றி விலாவாரியாக நான் பேசவில்லை; என் இலக்கு வேறு.)

மேலும், ‘திருமங்கல சூத்ரம்’, ‘பிரதியுபகாரத்துக்கு பதிலாக பிரதி அபகாரம்’, ‘நிதிபிரதிகள்’ எல்லாம் கண்டால், குலை நடுங்கிறது.

.

இந்தியாவின் தேர்தல் முறையில் மனுப்போட்டு நிவாரணம் கோருவது, மக்கள் மாக்களாக மாறி துணிவுடன் களம் இறங்கி பொது நலனை வற்புறுத்தி பெறுவது, தேர்தலில் கெலித்தபின் மக்களை உதறும் ‘நிதிபிரதிகளை’ வீட்டுக்கு அனுப்புவது, பொதுஜன அபிப்ராயத்தை நிலை நாட்டுவது எல்லாம் ஏட்டுச்சுரைக்காய், கவைக்கு உதவாது, அரசியல் சாஸனம் அவற்றை நிர்ணயம் செய்யவில்லை என்றெல்லாம் நொண்டிச்சாக்குச் சொல்லி, மாய்மாலம் செய்யாமல், இந்த லோகாயுக்தா பரமபத சோபான விளையாட்டை ஒத்திப்போட்டு விட்டு, ஆக்கபூர்வமான முறையில், மாக்னா கார்ட்டா மாதிரி ஒரு தெளிவான பொது விண்ணப்பத்தை கோடானுகோடி இந்தியர்கள், ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தால் என்ன? மூன்றாம் தடவையாக, கூவிக்கேட்கும் என்னுடைய தாழ்மையான வினாக்கணை:

இந்திய மக்களின் கோடிக்கணக்கான ஜனத்தொகை ஒரு மனதுடன், ஏகாக்ரஹ சித்தத்துடன், நம் ஜனாதிபதியிடம், குடியரசு என்ற வில்லில், உரிமை என்ற நாணேற்றி, விரைந்து பாயும் கணைகளை ~ Initiative, Referendum, Recall, Plebiscite ( மனுப்போட்டு நிவாரணம் கோருவது, மக்கள் மாக்களாக மாறி துணிவுடன் களம் இறங்கி பொது நலனை வற்புறுத்தி பெறுவது, தேர்தலில் கெலித்தபின் மக்களை உதறும் ‘நிதிபிரதிகளை’ வீட்டுக்கு அனுப்புவது, பொதுஜன அபிப்ராயத்தை நிலை நாட்டுவது) வற்புறுத்தி கேட்கவேண்டுமோ? அவற்றை அரசியல் சாஸனத்தில் அமைத்து வைக்கக் கெடு வைக்கவேண்டுமோ? பெருங்குரல் எழுப்பவேண்டுமோ/

என்ன சொல்கிறீர்கள்? இது அரசியல் அன்று. மக்களின் வாழ்வு ஆதார பிரச்னை.

இன்னம்பூரான்2010-11-09-Constitution-Referendum-aborigines-600.jpg

01 10 2011

http://nicholsoncartoons.com.au/wp-content/uploads/2011/02/2010-11-09-Constitution-Referendum-aborigines-600.jpg





உசாத்துணை:

http://www.econ2.jhu.edu/People/Eraslan/Papers/coalition-eer.pdf

***********

சூடா ஒரு மசால் தோசை சாப்பிடக் கொடுத்திருக்கீங்க..

இந்த உத்திரமேரூர் விஷயம் ஏன் அடிக்கடி இப்ப வெளியே வருதுன்னா, அதுல உள்ள சில நல்ல விஷயம் இப்ப இல்லையே என்கிற குறைதான். நீங்க சொல்லறா மாதிரி அந்தக் காலத்துக்கு அது ரொம்ப அதிகம், இன்னும் கிராம அளவிலே அது பழைய காலத்துலேருந்து வந்துகொண்டே இருக்கு. உங்களுக்குத் தெரியாததா..

அந்தக் காலத்துப் பெண்களுக்கு உரிமை எல்லாம் எப்படி இந்தக் காலத்துக்குப் பொருந்தறா மாதிரி எடுத்துக்க முடியும்னு தெரியலே. ஆனா,

சொந்தக்காரங்க போட்டி போடக்கூடாது,
ஒருவாட்டி பதவியல இருந்தா இன்னொரு தபா சான்ஸ் கிடையாது..
இவ்வளோ ஆஸ்தி பதவிக்கு வரத்துக்கு முன்னாடி வெச்சிருந்தா அதுதான் பதவி முடியற காலம் வரைக்கும் -
இத்தனைக்கும் 360 நாட்கள்தான் பதவிக்காலம்.
கள்ளம் அறியாத பச்சிளம் பாலகன் குடவோலைல எடுக்கறதுதான் தேர்தல் அதிகாரி மாதிரி.. (அல்லது ரிவர்ஸ் உள்ளத்தில் கள்ளமிலாத தேர்தல் அதிகாரிங்க கண்காணிப்பு - சிதம்பரம் கேஸ் மாதிரி இல்லாம..)

அடக் கடவுளே! இ சார் இப்படியெல்லாம் இங்கே எப்போ கொண்டு வரப்போறாங்க..
ஜோசியம் சொல்லுங்களேன்..

தி(வாகர்)
*
பழங்குடிகள் வாழ்வியல் மரபு உள்ளாட்ட்சிமுறையை அடிப்படையாகக் கொண்டது. மூவேந்தர்கள் என்றழைக்கப்பட்ட சங்ககால பழங்குடிகள் தலைவர் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஆளுமையை ஒப்படைத்து குமுகப் பாதுகாப்பு கவின்கலை இலக்கிய வளர்ச்சி போன்றவற்றில்மட்டும் கவனம் செலுத்தினர். வரி வசூல் கிஸ்தி என்ற வார்த்தைகளுக்கு அங்கே இடம் இல்லை. குடிப்பணம் அரசரின் அரசவைச் செலவுக்க்காக மக்களால் வழங்கப்பட்டது
மத்திய ஆட்சிமுறை வரி வசூல் போரிட்டுக் கொள்ளை அடித்தல் போன்றவை பிற்கால்த்தி்ல் குறிப்பாகப் பிற்காலச் சோழர் காலத்தில் அரசாளுமைக்கு அடிப்படையாக அமைந்தது. உள்ளா்ட்சிமுறை ஒரு சோதனை ஓட்டமாக மத்திய அரசாளுமையுடன் இணத்துப்பார்க்க எடுத்துக்கொண்ட ஒரு பரிசோதனை என்றே தோன்றுகிறது
நாகராசன்
*
ஆனால், இதை தற்காலத்து நாடு தழுவிய பொது தேர்தல் முறைக்கு இணையாக சொற்மாரி பொழிவது இம்மி அளவு கூட பொருத்தமில்லாத ஒப்புமை//

ஒப்புமை பொருத்தமில்லாமல் இருக்கலாம். ஆனால் கணேசனாரும், நீங்களுமே குறிப்பிட்டிருப்பது போல் குடவோலை முறைக்குச் சொல்லப்பட்டிருக்கும் தகுதி அடிப்படையின் நிபந்தனைகளை இங்கே கடுமையாகப் பின்பற்றலாமே! ஒரு முறை தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணி ஆற்றியவர்களுக்கோ, அவர்கள் உறவினருக்கோ, பெண்டு, பிள்ளைகளுக்கோ அடுத்த முறை வாய்ப்பளிக்கக் கூடாது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகளில் தங்கள் தொகுதிக்கு மேம்பாட்டுப் பணிகளைச் சரிவரச் செய்யவில்லை என்ற புகார்ப்பட்டியல் பெரும்பான்மை மக்களால் கொடுக்கப்பட்டால் அவர்களும் அடுத்த தேர்தலில் போட்டியிடக் கூடாது. ஜெயிப்பவர் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ, அல்லது எதிரிக்கட்சியாகவே இருக்கட்டுமே; மக்கள் நலனே பிரதானமாக இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கடுமையாகப் பின்பற்றினாலொழிய தேர்தலில் நிற்க முடியாது என்ற நிபந்தனையோடு அனுமதி கொடுக்க வேண்டும். அரசுகள் முன்வரவேண்டும். வருமா?? சந்தேகமே!
[கீதா]
*

....இந்த வழிமுறைக்கு Constructive Vote of No Confidence (கூடு விட்டு கூடு பாயும் தன்மையுடைய நம்பிக்கையில்லா தீர்மானம்!) என்று பெயர்.

Constructive Vote of No Confidence (கூடு விட்டு கூடு பாயும் தன்மையுடைய நம்பிக்கையில்லா தீர்மானம்!)


நாளை மேலும் இது தொடர்பான சில செய்திகள் வருமா ?

சுபா
*
நன்றி, ஸுபாஷிணி! 'அன்றொரு நாள்: அக்டோபர் 2' அண்ணல் காந்திக்கு ரிசெர்வ்ட். ஜெர்மனியும் வருது, வேறு விஷயமாக. எனக்கு ஜெர்மானியர்கள் ஒரு 'ஹெல்மட்'டை கழட்டி, மற்றொரு 'ஹெல்மட்'ட்டை மாட்டிக்கொண்டது பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உண்டு. அதை சொல்ல உகந்த நாளை பிடிக்கவேண்டும். இடையில் நீங்கள் சொல்ல விரும்புவதை கேட்க அவா.
*
நாளைய நிகழ்வை நினைத்துப் பார்க்க இன்று ஒரு பதிவு இணைத்திருக்கிறேன் Germany Reunification என்ற தலைப்பில்.. பாருங்களேன்.. விழியத்தின் வழி அன்றைய நிகழ்ச்சிகளை நன்கு தெரிந்து கொள்ளலாம். பார்ப்போம். வாய்ப்பும் நேரமும் அமைந்தால் நானும் எழுதுகிறேன்.

அண்ணல் காந்திக்கு காத்திருக்கிறேன்.

சுபா
*
I am waiting for your kind input, Subashini.
*

No comments:

Post a Comment