Monday, December 31, 2012

01 01 2013
ஜனவரி 1, 2013
என்றோ ஒரு நாள்!

புத்தாண்டு தினம்: 01 01 2013
புத்தம் புதிய நேரம்: 01 01 1906

நண்பர்களே!
மடலாடும் குழுக்களில் இருக்கும் நாம், மற்றபடி ஆடாவிடினும், மடலாடி பழகுவுமே என்ற எண்ணம் உதயமாயிற்று. இனி, முடிந்தவரை கடுதாசிகள் எழுதுவதாக, உத்தேசம். அது நம் நெருக்கத்தை மேன்மைபடுத்தும் என்று தோன்றுகிறது. நேரமின்மையால், என்னுடைய இணையதளத்திலும். வலைப்பூவிலும் பதிவுகளை ஏற்றுவதில் சில வருட தாமதம் ஆகிவிட்டது. விட்ட குறை, தொட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. இனிமேல், என்னுடைய இணையதளத்திலும், வலைப்பூவிலும் பதிவுகளை ஏற்றி, அதற்கான தொடர்பு கொடுத்தால், அதை மனமுவந்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதழியல், மடலாடல் குழுக்கள் விதிகளுக்கு உட்பட்டு என் இயக்கம் அமையும்.
முதற்கண்ணாக, உங்கள் யாவருக்கும் என் 2013 புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் அபிலாஷைகள் பூர்த்தியாக வேண்டும் என இறைவனிடன் என் பிரார்த்தனைகள்.
அன்புடன்
இன்னம்பூரான்
01 01 2013
*
திருமலையில் அலை மோதும் கூட்டம். நிரம்பி வழியும் உண்டியல். இந்து மத அபிமானிகள், சமய சந்தர்ப்பமாக அகப்பட்டுக்கொண்ட கிருத்துவ பண்டிகையை, விமரிசையாக கொண்டாடுவார்கள். ‘அதைக்கொடு’, இதைக்கொடு’ ஒம்மாச்சியிடம் பட்டியல் சமர்ப்பிப்பார்கள். சந்தடி சாக்கில், நானும் உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாமாங்கம் 12 வருடங்களுக்கு ஒரு முறை. இங்கோ 26 வருடங்களுக்கு பிறகு தான் நாலு இலக்கங்களும் வெவ்வேறாக அமைந்துள்ளன. (1987 ~2013). அத்துடன் விட்டு விடுவது விவேகம். இதில் ஆரூடம் தேடுவதற்கு ஒன்றுமில்லை.
க்ரகேரியன் காலண்டர் படி மூன்றாவது சகாப்தத்தின், 21வது நூற்றாண்டின், 2010 என்ற பத்தாண்டு வரிசையில் நான்காவது ஆண்டு பிரவேசிக்கும் இந்த தினம், கலியுகத்தின் 5114-5 ஆண்டாகக் கருதப்படுகிறது. அசிரியன் காலண்டர் அதை விட அரதப்பழசாம்: 6763. சும்மா பத்தாயிரம் ஆண்டுகளை கூட்டிக்கொண்டால், ஆச்சு ஹொலெசின் காலண்டர்: 12013. அது தொல்லியல் துறை போன்றவைக்கு பயன் படுமாம். யுனிக்ஸ் நேர பட்டியல் கொடுத்து, கணக்கு எலிகளாகிய உம்மையும், எம்மையும் பயமுறுத்தும் உத்தேசம் இல்லை.
இந்தியாவில் தொன்மை காலத்திலிருந்தே ‘காலம்/ன் மீது கவனம் அதிகம். கி.பி.நான்காவது நூற்றாண்டு காலகட்டத்திலியே ‘சூர்ய சித்தாந்தம்’ என்ற நக்ஷத்திர மண்டலம் பற்றிய நூல், உலகம் உருண்டை என்கிறது. உஜ்ஜயின் என்று இன்று கூறப்படும் அவந்தி என்ற நகருக்கும் ரோஹிதகா நகருக்கும் இடையே ஓடும் ரேகையை மையப்படுத்தி, கால நிர்ணயம் செய்கிறது.  நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கும், கலைகள், கல்வி, அறிவியல் ஆகியவற்றுக்கு மூலாதாரமாக விளங்கிய மேதைகளை அணைத்து, ஆதரித்து, போஷித்தது பழங்கால மன்னராட்சிகள் என்பதற்கு சந்திரகுப்த மெளரியர், அசோகச் சக்கரவர்த்தி, தென்னாட்டு சேர,சோழ, பாண்டியர், ஷெர்ஷா ஸூரி போன்றோரின் சாதனைகள் சாட்சி. வர, வர மாமியார் கழுதை போல் ஆனாளாம் என்றபடி, 17ம் நூற்றாண்டிலியே இருண்ட காலம் தொடங்கியது. அறிவியலுக்கும் அரசாங்கத்தும் காத தூரம் என்று அந்தப்புர வாசிகளாகிவிட்ட இந்திய சமஸ்தானதிபதிகள் சூர்ய சித்தாந்ததைக் கண்டுகொள்ளவில்லை. காலம் மாறாவிடினும், அங்கங்கே (தற்கால அமைப்புப்படி, ஜில்லாவுக்கு, ஜில்லா!) நேரங்கள் மாறிய வண்ணம் பாடாய் படுத்தின. மக்களை பற்றி யாருக்குக் கவலை?
1802 லிருந்து மதராஸ் நேர நிர்ணயம் என்று ஒரு நடைமுறை இருந்தாலும், 1905 வரை, அதாவது ஒரு நூற்றாண்டுக்கு மேல், மத்திய அரசு கால நிர்ணயம் பற்றி கவலைப்படவில்லை. அலஹாபாத் அருகில் ஓடும் 82.5 கிழக்கு: என்ற ரேகையை மையப்படுத்தி, ஜனவரி 1 ,1906 அன்று இந்தியாவின் ஒரே ஒரு கால நிர்ணயத்தை பிரகடனப்படுத்தியது. அந்த பிரகடனத்தின் நினைவாக, இன்றைய தலைப்பு அமைந்தது.
ஆனால், 1947 வரை பம்பாயும், 1948 வரை இந்த விஷயத்தில் கல்கத்தாவும் தனி ராச்சியம். அது மட்டுமல்ல. இரண்டாவது யுத்த காலகட்டத்தில், செப்டம்பர் 1, 1942லிருந்து அக்டோபர் 14, 1945 வரை, இந்தியாவின் நேரம் ஒரு மணி நேரம் முந்தி வைக்கப்பட்டது. இந்த நல்ல வழக்கம் ஏன் கை விடப்பட்டது என்று புரியவில்லை. இன்றளவும் மேற்கத்திய நாடுகள், மின்சாரத்தை மிச்சம் பிடிக்க, இந்த முறையை கையாளுகின்றன.
இந்தியா ஒரு காண்டம் போன்ற பெரிய நாடு. அருணாசலபிரதேசத்தில் ஆதவன் எழும்போது, அஹமாதாபாத்தில் இருட்டு. ஆகவே, அதற்கேற்ப மணி அடிப்பது தான் விவேகம். கிட்டத்தட்ட 28 தீர்க்கரேகைகளை உட்கொண்ட நம் பிரதேசத்தில், இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இரண்டு மணி நேர வித்தியாசம் இருப்பது என்னவோ, விஞ்ஞானம் அறிந்த உண்மை. அதை விஞ்ஞானிகள் அழுத்தமாகக் கூறினாலும், அரசு அசைந்து கொடுக்கவில்லை. பூகோள உண்மைகளை பகர்ந்து விட்டு, இந்த 28 தீர்க்கரேகைகளை உட்கொண்ட நம் பிரதேசம் பெரிதல்ல என்றும், சீதோஷ்ண நிலை ஒரு பொருட்டு அல்ல என்று அடித்துப் பேசி ‘ஒரே இந்தியா! ஒரே கால நிர்ணயம்’ என்ற அறிவியல் கலைந்த கூற்றை 2004ல்  உறுதி செய்து விட்டார், நாம் விஞ்ஞான அமைச்சர் கபில் சிபல் அவர்கள்.  ரயில்வே கால அட்டவணைகளைப்பார்த்தால் திகைத்துப் போகும் வரை, அவை பல குழப்பமான வகைகளில் காலம் தள்ளி வந்தது தெரிய வருகிறது. சொல்லப்போனால், அது பெரிய கதையாக நீண்டு விடும்.
அன்புடன்,
இன்னம்பூரான்
01 01 2013
*
உசாத்துணை:
 http://www.hindustantimes.com/editorial-views-on/Edits/Two-timing-India/Article1-246310.aspx
http://www.hindu.com/thehindu/mp/2002/01/07/stories/2002010700130300.htm
http://dst.gov.in/admin_finance/un-sq1007.htm
*
Copyright: Innamburan: The moral rights of the author has been asserted. No reproduction in any form/fashion without his prior permission.