Thursday, April 18, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 21 ‘துலுக்மா’ + அரபா’...




அன்றொரு நாள்: ஏப்ரல் 21 ‘துலுக்மா’ + அரபா’...

Innamburan Innamburan Sat, Apr 21, 2012 at 1:33 AM

அன்றொரு நாள்: ஏப்ரல் 21
‘துலுக்மா’ + அரபா’...
சாம்ராஜ்யங்கள் சமைத்த சக்ராதிபதிகளுக்கு பெண்ணாசையும், பொன்னாசையும், மண்ணாசைக்குப் பிறகு தான். மண்ணாசையும் மற்றவர்களை இழித்து, அவர் சொத்துக்களை அழித்து அடையும் இறுமாப்புக்கு அடுத்த படியாகத்தான். நம்முடைய சங்க காலத்து மன்னர்களில் சிலர் ஊரை கொளுத்தி அழித்ததும், விவசாயத்தை பாழ்படுத்தியதும், பாடப்பட்டுள்ளன. கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்து, மெய்கீர்த்தி நாடியவர்கள், அந்த அரசகுலம்.
“சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை யாரெயில் பல தந்து
அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிஞ்”
என்று, இதையெல்லாம், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய புலவர் காரிகிழார் கூறுகிறார், புறநானூற்றில். இத்தகைய இறுமாப்பு தான், இன்றளவும், யுத்தங்கள் நடப்பதற்கு காரணம் என்பதை முன்னிறுத்த, இந்த முகாந்திரம்.
உங்களுக்கு அந்த நொண்டியை தெரியுமோ? -‘தைமூர்லேன்’. அவனொரு நாசகாரி. அவன் வந்து போனால், சுனாமி அடித்தமாதிரி. அவனுடைய வம்சாவளி திருமகன் பாபரின் வாசஸ்தலம் ஆஃப்கனிஸ்தான், காபூல், கண்டஹார். பஞ்சாப், பாபரின் கையில். ஐந்தாவது தடவையாக, அவர் இந்தியாவின் மீது படையெடுக்க 1525ல் ஆயத்தமானார். ஆலாம் கான் என்ற தளபதி, அவருடைய விரோதி தெளலத் கானுடன் கூடா நட்பு கொண்டதும், பஞ்சாப் கையை விட்டு நழுவியதும், இருவரும் பாபரிடம் அடைக்கலம் புகுந்ததும், பஞ்சாப்பில் பாபர் காலை ஊன்றியதும் ஏப்ரல் 21, 1526 அன்று நடந்த முதலாவது பானிபட் யுத்தத்தின் முகத்திரை என்க.  இந்த யுத்தம், அதன் பின்னணி, அதில் திட்டமிட்ட/எதிர்பாராத நிகழ்வுகள், லோடியின் துரதிர்ஷ்டம், பாபரின் அதிர்ஷ்டம்,   நீண்டகால விளைவுகள் எல்லாம், இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்து, அடிமை வாழ்வை, வாழ்வியல் மரபாக அமைத்து விட்டது. பிற்காலம், அண்டிப்பிழைக்க வந்த ஐரோப்பியர்களுக்கு, கைக்கெட்டிய கனியாகி விட்டது, பாரதவர்ஷம்.
இனி ‘சண்டைக்கு’ வருவோம். பல ஹேஷ்யங்களை தவிர்த்து, பாபர் சொன்னதை கேட்போம். ஃபெப்ரவரி 26, 1526லில் ஹிஸ்ஸார்-ஃபிருஜாவிலும், ஏப்ரல் 2, 1526ல் டோப் பகுதியிலும் வாகை சூடினோம். இப்ராஹிம் லோடி டில்லியில் 1525ல் அடைந்த வெற்றியை மறக்கவில்லை. அவர் பெரிய ராணுவத்துடன் (நூறாயிரம் சிப்பாய்கள் & ஆயிரம் போர்க்களிறுகள்) ஆக்ராவிலிருந்து டில்லி வந்து, பானிபட் நோக்கி நடை போடுகிறார். என்னிடமோ 12 ஆயிரம் சிப்பாய்கள். யுத்த தந்திரங்கள் ஆகிய ‘துலுக்மா’ வும், .அரபா’வும் எனக்கு கை வந்த கலை. ஒரு கை பார்த்துடலாம் என்று செயல்பட்டேன்.
(இடை வேளை)
  1. முதல் பானிபட் யுத்தத்தில் பாபரின் வெற்றிக்குக் காரணம் யாது?  -அவர் துப்பாக்கி, தோட்டா,  பீரங்கி பயன்படுத்தியது. (ஏழாம் வகுப்பு பரிக்ஷை)
2. முதல் பானிபட் யுத்தத்தில் பாபரின் வெற்றிக்குக் காரணம் யாது? - பாபரின் வில்லாளிகள் வெளுத்து வாங்கி விட்டார்கள். ( ஒன்பதாவது வகுப்பில், ஆசிரியர்)
3. முதல் பானிபட் யுத்தத்தில் பாபரின் வெற்றிக்குக் காரணம் யாது? - பாபரின் ‘துலுக்மா’ + அரபா’ (முதுகலை ஆய்வு: சரித்திரம்.)
4. முதல் பானிபட் யுத்தத்தில் பாபரின் வெற்றிக்குக் காரணம் யாது? - இப்ராஹிம் லோடியின் துரதிர்ஷ்டம். கெட்டிக்காரத்தனமாக, பாபரின் படை மீது தாக்குதல் நடத்தாமல், தாக்குப்பிடித்த லோடி, ஏப்ரல் 21 அன்று, ஏனோ, தாக்கிவிட்டார், முதல் நாள் இரவில் நடந்ததை அறியாமல், (ஸார்! பாயிண்ட் மேட்!)
5. பாபரின் ‘துலுக்மா’ + அரபா’: பத்து வரிகளில் விளக்குக. 
  • தன்னிடம் இருந்த 700 வண்டிகளை ஒன்றாக, கயிற்றினால் பிணைத்து, ஒரு அரண் அமைத்துக்கொண்டார், பாபர். நடு, நடுவே, பீரங்கி வண்டிகளுக்கு இடை வெளி. பொருத்தமான இடங்களில் வில்லாளிகள், துரகப்படை. இருக்கும் ராணுவத்தை, இடது/வலது/மையம்/பின்பக்கத்து அணி/ ரிஸர்வ் என்று பிரித்தார். லோடி தாக்கட்டும் என்று காத்திருந்தார். அடிக்க வந்த லோடி மாட்டிக்கொண்டார். நாலா பக்கதிலிருந்தும் பாணங்களும் குண்டுகளும் பறந்தன. இதில் அதிர்ஷ்டத்தின் பங்கு இரண்டு. முதல் நாள் இரவு பாபர் அனுப்பிய படை, இரண்டுங்கெட்டானாக மாட்டிக்கொண்டது.  ஒரு வதந்தி வேறு. அதை நம்பி போரில் இறங்கினால், துரதிர்ஷ்டவசமாக லோடி மாட்டிக்கொண்டார். போதாக்குறைக்கு, பாபரின் படை பலம் மிகவும் குறைந்து விட்டது. அதற்கு முன்னால், இப்ராஹிம் லோடி கொலையுண்டார். பாபரும் இப்ராஹீம் லோடியின் தோஷாக்கானாவை (கருவூலம்) கைப்பற்றினார். முதுகுடுமிப் பெருவழுதியைப்போல் இல்லாமல், லோடியின் அம்மை, குடும்பம், சுற்றம் யாவற்றையும் பண்புடன் நடத்தினார்.
  • என்ன மார்க் குடுப்பேள்?
இன்னம்பூரான்
21 04 2012
Inline image 1

உசாத்துணை:
Rickard, J (15 May 2010), First battle of Panipat, 21 April 1526 http://www.historyofwar.org/articles/battles_panipat_first.html

No comments:

Post a Comment