Monday, April 15, 2013

இதுவும் ஒரு பிருகிருதி:‘பாய்சன் லெட்டர் பத்து’




இதுவும் ஒரு பிருகிருதி:‘பாய்சன் லெட்டர் பத்து’
Innamburan S.Soundararajan Tue, Apr 16, 2013 at 6:32 AM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88
பச்சண்ணா சந்தில் நவசீலம்!

‘பாய்சன் லெட்டர் பத்து’
Inline image 1

‘பாய்சன் கிங் எலமனூர்’, ‘பாய்சன் கிங் எலமனூர்’ என்று அந்தக்காலத்தில் பிராபல்யம். அவர் எலமனூர் ஸ்டேஷன் மாஸ்டர். நல்ல பாம்பு அல்லது எந்த விஷஜந்து கடித்து விட்டால், அவருக்கு தந்தி கொடுத்தால் போதும். அவர் மந்திரித்து விஷத்தை முறியடித்து விடுவாராம். வெள்ளைக்காரன் ரயில்வே கம்பெனி எந்த ஸ்டேஷனிலிருந்தும் அவருக்கு இலவசமாக தந்தி அனுப்ப வசதி செய்து கொடுத்தது. இதெல்லாம் சின்ன வயசிலே துண்டுப்பிரசுரத்தில் படித்தது. அந்த அளவுக்கு நம்ம பச்சாண்ண சந்து ‘பாய்சன் லெட்டர் பத்து’ என்ற பத்மன் என்ற பத்மநாபனுக்கு அபகீர்த்தி என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

பச்சண்ணா சந்து ஒரு தனி உலகம். அமீன் பிச்சுமணி கூச்சல் ரகம். டெய்லர் ராவுஜி மெளனராகம். சூட்டிகை கமலம் தான் உயிர்நாடி. மூணாவது கட்டு அண்ணாசாமி ஐயங்கார் செத்தாலும் செத்தார், அவருடைய சீமந்த புத்திரன் பத்துவுக்கு காவல் இல்லாமல் போய்விட்டது. அவனும் தன்னிஷ்டப்படி மடல்கூத்து நடத்திக்கொண்டிருந்தான். நாலாங்கிளாஸ் படிக்கும்போதே, மதுரம் டீச்சருக்கும் தாமஸ் சாருக்கும் தகாத உறவு என்று கழிவறையில் கிறுக்கின பிஸ்தா அவன்.  எஸ்.எஸ்.எல்.சி. கோட்டு அடிச்சாலும், அவன் ஜேபில் அஞ்சு மசி பேனாக்கள் இருக்கும். எப்போதும் அழுக்குக் கோட்டு ஒண்ணு. அதில் கடந்த காலத்து ஸ்டாம்ப் பேப்பர் வச்சுருப்பான். உயிலை மாற்றி எழுத, போலி கிரயப்பத்திரம் எழுத, பொய்க்கணக்கு எழுத ஆகி வரும். அற்புதமாக ஆங்கிலம் எழுதுவான். தப்பும் தவறும் இயல்பாகவே அமையும். படிக்கிறவா நம்பறமாதிரி இருக்கும். உலகமே அவனுக்கு சத்ரு. இப்டித்தான், இவன் கனம் கோர்ட்டாருக்கு ஒரு லெட்டர் போட்டான், ‘இந்த பிச்சுமணி துரைத்தனத்தாருக்கு உண்மையான அமீன் இல்லை. மஞ்சக்கடுதாசி கடங்காரன் கிட்ட பச்சை நோட்டு இரண்டு வாங்கிவிட்டான்.’ என்று. வில்ஸன் துரை வீட்டுக்கே வந்துட்டான். மாட்டிக்கொண்ட பிச்சுமணி உதறிப்போய்ட்டார். வில்ஸன் அண்ணாசாமி ஐயங்காரை விட்னெஸ்ஸா கூப்பிட்டான். அவருக்கு மயக்கம் வரும்போல ஆயிடுத்து, அந்த லெட்டரை பார்த்தவுடன். பிள்ளையாண்டான் கையெழுத்து ஸ்பஷ்டமா இருந்தது. எப்படியோ சமாளிச்சார்னு வச்சுக்கோங்கோ. அவனை ஒருவாறு அடக்கி வச்சிருந்தார். அவரும் போய்ட்டார். தறுதலைக்கும் விடுதலை.

ஜோஷிக்கடைக்கு ஒரு லிகிதம். ‘உன் கடையிலிருந்து ஒன்பது கஜம் சீட்டி எடுத்து ராவுஜி கமலத்துக்கு சித்தாடை தைச்சுக்கொடுத்தார்.’ ஜோஷி குஜராத்திக்காரனா? ராவுஜி கிட்ட நேரிடையா சொல்றான், ‘ராவுஜி! நீங்க அப்படியெல்லாம் செய்யற ஆளு இல்லை. இருந்தாலும் அந்த பத்மன் பாயி கிட்ட ஜாக்கிரதையாக இரும்.’ என்று. அவர் சக்குபாயிடம் மட்டும் தான் புலம்பினார். அவள் கமலத்திடம் சொல்ல, அவள் பத்மனை நார் நாரா கிழிச்சுப்போட்டாள். இதற்கெல்லாம் அடங்கறவனா, அவன். கறுவிக்கொண்டே இருந்தான்.

வழக்கம் போல, கமலம் சரோஜா மாமியை பார்க்கப்போனாள். மாமி அவளுக்கு பாட்டுக் கிளாஸ் எடுக்கிறாள். இரண்டு பேரும் அன்யோன்யம். கமலம் போல சமத்தும் கிடையாது. சரோஜா மாதிரி யாருக்கும் பரிவும் கிடையாது. இது பொறுக்குமோ, ‘பாய்சன் லெட்டர் பத்துவுக்கு’? மேல ராஜவீதி வக்கீல் ராகவாச்சாரியாருக்கு தஞ்சாவூர் கோர்ட்டில் மட்டுமில்லை, மதராஸ் ஹை கோர்ட்டில் கூட ரொம்ப மரியாதை என்று பேசிக்கொள்வார்கள். ஜட்ஜ் ஓல்ட்ஃபீல்ட் சாயரக்ஷையில் வந்து அவரிடம் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்கிறார். அதுக்காகவே, இவர் மாசாமாசம் மதராஸ் போறார்னு பேசிப்பா. எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. அவர் முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும். ரொம்ப அமரிக்கையாக இருப்பார். பெரிய ஹாலில் ஜே ஜேன்னு கட்சிக்காரர்கள் கூட்டம் இருந்தாலும், எல்லாரிடமும் கனிவாக பேசுவார். தீர விசாரித்துத் தான் கேஸை எடுத்துக்கொள்வார். கிரிமினல் சைடு செல்வம் ஈட்டும் என்றாலும், அவருக்கு அதில் ஆர்வம் கிடையாது. அவரை பற்றி, யாராவது கேட்டால், இன்னொரு நாள் தான் எழுதணும். 

சரோஜாவிடம் பாட்டு கற்றுக்கொண்ட கமலம் வீட்டுக்குத் திரும்பும்போது லேசாக இருட்டி விட்டது, அன்று. வாசலில் பராக் பார்த்துக்கொண்டு நின்ற பத்மன், ‘ஏண்டி கமலம் இத்தனை லேட்டு?’ என்றான். தேவையா? அவளுக்கு ஒரே எரிச்சல். ‘என்ன நச்சுக்கடுதாசி! நீங்க யாரு என்னை கேட்கறத்துக்கு?’ என்றாள். ‘அப்படி கேளும்மா, கமலம்.’ என்று தூபம் போட்டார் அமீன் பிச்சுமணி. அவமானம் தாங்காமல் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தால், ஆம்படையாள் ஜானம்மா ‘அந்தக் குட்டிக்கிட்ட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு.’ என்று தோளில் முகத்தை உரசிக்கொண்டு அழகு காண்பித்தாள். பத்மனுக்கு கோபம் கொப்பளித்தது. ஏனென்றால், அன்று இரவு காயப்போட்டுவிடுவாள். வாசல் திண்னை தான் மஞ்சம். 

அந்த ஆத்திரத்தில் பேனாவை எடுத்தான். கன்னா பின்னான்னு ராகவாச்சாரியாரையும் கமலத்தையும் பற்றி அவதூறுகளை அரைகுறை பிட்ஜின் இங்க்லீஷில் எழுதி, கவரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜரிகை டர்பன் கோபாலாச்சாரியின் விலாசம் எழுதி விட்டு, தூங்கிப்போய் விட்டான். காலையில் எழுந்தவன், அதை மறந்து, சீட்டு விளையாடப்போய்விட்டான். ஜானம்மா, பாவம், அப்பாவி. நிரக்ஷரக்குக்ஷி. கமலம் ஸ்கூலுக்குக் கிளம்பச்ச்ச, அவளிடம் அதைக் கொடுத்து தபாலில் போடச்சொன்னாள். விலாசத்தைப்பார்த்துத் திகைத்துப்போன கமலம், நேராகப்போய் அதை கோபாலாச்சாரியிடமே சேர்த்து விட்டாள். அவரும் கொஞ்சம் ஓய்வில் இருந்ததால், சாவதானமாக, அதை பிரித்துப்படித்தார். முகம் கறுத்தது.  அவர் அண்ணாசாமி ஐயங்காருக்குப் பத்து நாள் தாயாதி. இரண்டு குடும்பத்துக்கும் ஜன்மப்பகை புகைந்து கொண்டு இருந்தது. கமலத்திடம் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அவள் முகம் சிவந்ததையும், அவளுக்கு அழுகை பொத்துக்கொண்டதையும், போலீஸ்ஸோல்லியோ, உன்னிப்பாக கவனித்தார். ஆதியோடந்தமாக, கேட்டு, எல்லாவற்றையும் எழுதி வாங்கிண்டார்.
வழக்கு பதிவு செய்து விட்டார். பச்சண்ணா சந்து என்ன? மேலராஜவீதியே அதிர்ந்தது. 
மாஜிஸ்ட்ரேட் மாசிலாமணி ஜெயில் தண்டனை கொடுத்து விட்டார். இத்தனைக்கும் வக்கீல் ராகாவாச்சாரியார் பிராது ஒன்றும் கொடுக்கவில்லை.
நாலு மாதம் கழித்து:
ஜானம்மா: என்னமோடியம்மா. கூழும், களியும் தான் என்று அழறார். ஆனா கொழு கொழுன்னு தான் இருக்கார். பேனா கேட்டார். விநாசகாலே விபரீத புத்தி! தரமாட்டேன் என்று சொல்லி விட்டேன்.
அடுத்து வருவது கமலம்.
இன்னம்பூரான்
19 11 2012

No comments:

Post a Comment