Friday, April 25, 2014

எலெக்க்ஷன் சில்லரை -1

எலெக்க்ஷன் சில்லரை -1

இன்னம்பூரான்
25 04 2014
தேர்தல் முடிவு வரும் வரை தாக்குப்பிடிக்கணுமே. ஆனாலும் பணம், காசு என்று ஆலாய் பறக்கலாகாது. அதனால் சில்லரைக்கு வந்தேன். குலுக்கலாம். குலுங்கும். பண்பு குலையாது. எப்போதுமே சர்தார்ஜிகளையும், தாய்க்குலத்தையும் கேலி செய்வது ஆணுக்கு அழகு ? நான் நேரில் கேட்டு மகிழ்ந்த நிகழ்வு. தருமமிகு சென்னையின் ஆர்யபவனாகிய மைலாப்பூரில் ரானடே நூலகமும், ஶ்ரீநிவாச சாஸ்திரி ஹாலும், இந்த பிரமுகர்களைப்போல இல்லாமல், ஒரே இடத்தில் வாசம். அருகில் உள்ள வக்கீல் மாமாஸ் வாசஸ்தலமாகிய மைலாப்பூர் கிளப்பிலிருந்து மசால் தோசை நறுமணம் தூக்கியடிக்கும். சமயத்தில், ‘ஆடுதனை இறக்குடா!’ போன்ற நற்றொலிகள் ( தமிழ் ரைட்டா, தேவ்?) எதிரொலிக்கும். கீர்த்தனாரம்பம் இப்படியெல்லாம் இருக்கும்போது, முதல் தேசீய தேர்தல் 1952 பற்றி ஒரு சான்றோர் சபை ஶ்ரீநிவாச சாஸ்திரி ஹாலில் கூடியது. பிற்கால கவர்னர் கோபால் ரெட்டிகாரு தலைமை. பேச்சாளர்களில் ஒருவர் திருமதி.நல்லமுத்து ராமமூர்த்தி. ராணி மேரிக்கல்லூரி முதல்வர்.  அவர் நன்முத்தே. அவருடைய கொயட் கணவர் டி.வி.ராமமூர்த்தி இந்தியாவின் முதல் ஆக்சுவரி. நமக்கு ஏற்கனவே அறிமுகமான, உன்னதமாக உரையாற்றுவாராகிய டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி அவர்களின் சத்புத்திரன்.  ஆனால் கொஞ்சம் (கொஞ்சம் என்ன? ஜாஸ்தி) கர்நாடகம். டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரிக்கு பிராமணரல்லாத மருமகளை வரவேற்க விருப்பமில்லையாம். பிள்ளையை கூட தள்ளி வைக்க நினைத்தார் என்று பேச்சு அடிபடும். டி.வி.ராமமூர்த்தி செவி சாய்க்கவில்லையாம். அவர் தான் நல்லமுத்துப்பக்கம் சாஞ்சுட்டாரே. டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி வழிக்கு வந்துட்டார் என்று கேள்வி. இதெல்லாம் எதுக்கு சொல்றே என்று கேப்பேள். பின்னே சில்லரையை எப்டி குலுக்கறது. சொல்லும் ஓய் !

தலைமை காரு தாய்க்குலத்தின் மீது ஒரு ஜோக் அடிச்சார். இஸ்லாமிய புர்க்கா அணிந்த ஒரு பெண்மணி, ஒரு ராவுத்தரின் மனைவியாக வந்து வாக்களித்து விட்டு, மறுபடியும் மற்றொருவரின் மனைவியாக வந்த் வாக்கு அளித்தார் என்று அளந்து விட்டார்கள்; ‘கொல்’ என்று சிரித்து தன் ஜோக்கை மெச்சினார். கரவொலி தணிந்த பின், திருமதி.நல்லமுத்து ராமமூர்த்தி வினவினார், ‘புர்க்கா ஆசாமி ஆம்பிளையில்லை என்று உமக்கு எப்படித்தெரியும்?’. கொழு கொழு கன்றே! கன்றின் தாயே என்று அழகிய வதன கோபால் ரெட்டிகாரு முகத்தில் ஈயாடவில்லை. கரவொலி மைலாப்பூர் கிளப்பில் கூட கேட்டதா சொல்லுவா.
வர்ரேன்.

சித்திரத்துக்கு நன்றி: http://news.bbcimg.co.uk/media/images/65645000/gif/_65645962_3_burka_290-1.gif

No comments:

Post a Comment