Sunday, December 21, 2014

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:1 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III




ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:1


இன்னம்பூரான்
21 12 2014

சொல்றது எளிது. செய்வது கடினம். ராமநாதனோட அப்பா கர்ணம், திருக்கருகாவூரில். அப்போதெல்லாம், ஊர் அத்தனை பிரபலம் இல்லை, பிள்ளை வரம் அளிப்பதில். அதனால், அதிகப்படியான போக்குவரத்து கிடையாது. நாளைக்கு ஒரு பஸ் உச்சிவேளையில் வரும். சாயும் வேளை திரும்பும். அந்தக்காலத்தில் மூன்று போகம் சாகுபடி. சர் ஆர்தர் காட்டன் போட்ட வாய்க்காலில் தண்ணீர் கல கல என ஓடும். தலையாரி ஆறுமுகமும், ஏழுமலையும் ஒரு நாள் பிச்சுமணி அய்யரின் ( அதான் ராமநாதனனின் தந்தை) பேச்சை கேட்பார்கள். அடுத்த நாள் மணியக்காரர் ஹாஜி அப்துல் காதர் மொய்னுதீன் பேச்சை கேட்பார்கள். அது ஒரு ராஜதந்திரம். பக்கத்தில் இருக்கும் பண்டாரவாடையில் வெற்றிலை சாகுபடி செய்பவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர். என்ன தான் சாதிக்கட்டுபாடுகள் இருந்தாலும் அந்த பிராந்தியத்தில் ஒற்றுமை அதிகம். சம்பிரதாயத்துக்கு ஒன்றும் குறைச்சல் இருக்காது. என்ன தான் அன்யோன்யம் இருந்தாலும், நாமநாதன் ஹாஜி வீட்டில் சாப்பிடமுடியாது. பீபீ கொடுக்கிற அல்வாத்துண்டை ரகசியமாக வாயில் போட்டுக்கொள்வான். கோகுலாஷ்டமி பக்ஷணங்கள் எல்லாம் சீர் வரிசை மாதிரி மணியக்காரர் வீட்டுக்குப் போகும். இத்தனைக்கும் கிஸ்தி விவகாரத்தில் இரண்டு பேருக்கும், கைகலப்பைத் தவிர, மற்ற எல்லா சண்டையும் உண்டு. ஒரு நாள் கலைக்டர் ஜான்சனே வந்து சமாதானம் பன்ணி வைத்தான் என்று சொல்லிக்கொள்வார்கள். ராமநாதன் தாம் அரைகுறை இங்கிலீஷில் துபாஷியாம்.

என்னடா! ஐயங்கார் இருக்கவேண்டிய இடத்திலே ஹாஜியா என்று சில பேர் மூக்கிலெ விரலை வைக்கிறார்கள். நம்ம மொய்தீன் சாகிபுடைய தாத்தா ஜனாப் முகம்மது மொய்தீன் தான் கும்பகோணம் துளிர் வெற்றிலைக்குத் தகப்பன் எனலாம். ஏக்கர் கணக்கா வெற்றிலைத்தோட்டம். அப்பவே ஏற்றுமதி ஆச்சு என்பார்கள். எந்த வெளியூர்க்காரன் வெற்றிலை போடுவான் என்று கேட்காதீர்கள். ஜான்சனுக்கு ஸ்பெஷல் சப்ளை போகும். உறையூரிலிருந்து சுருட்டு வரும். சாம்பசிவம் அய்யர் ( அதான் ராமநாதனுடைய கொள்ளுத்தாத்தா) ஜனாப் சாஹிபுடைய குமாஸ்தா. பற்று வரவு எல்லாம் அவருக்குத்தான் அத்துபடி. திடீரென்று ஒரு நாள் ஊரில் ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு. கோமளா மாமி தான் அடுப்பை அணைக்க மறந்து போயிட்டா. கூரை பற்றிக்கொண்டது என்பார், சிலர். பிரச்னம் கேட்டோம், மலையாளத்து பிராமணாள் மூலமா.  தெய்வகுற்றம் என்று சொல்கிறார்கள். இது ஒரு கட்சி. அக்ரஹாரமும் எண்ணைக்காரத்தெருவும் சப்ஜாடா காலி. அக்னி பகவான் ஸ்வாஹா பண்ணிட்டார். எல்லா வீடுகளும் சாம்பலாயின. ஜனாப் முகம்மது மொய்தீன் தான் எல்லாருக்கும் கட்டிக்கொடுத்தார். பட்டா, கிட்டா பிரச்னையெல்லாம் தீர்த்து வைத்தார். சுயம்பு மாதிரி, யாரும் ஏதுவும் செய்யாமலே, பட்டாமணியம் அப்பாசாமி ஐயங்கார் தேக வியோகம் ஆனபின், ஜனாப் முகம்மது மொய்தீன் தான் பட்டாமனியம் என்ற எழுதப்படாத விதி வந்தது. பரம்பரை சொத்தாகவும் மாறியது. இனபேதம், மதபேதம் இல்லாமலும், சம்பிரதாயமான இனபேதமும், மத  பேதமும் உடன் வர, கிராமத்தில் நல்லாட்சி நடந்து வந்தது. இது எல்லாம் ராமநாதன் சொல்லித்தான் எனக்குத்தெரியும். ஏதோ பழைய பேப்பரை எல்லாம் குடைந்து விட்டு அவன் சொன்னான், ‘டேய் ராஜூ! மன்மோகன் சிங் மாதிரி சாம்பசிவம் அய்யர், சோனியா மாதிரி, ராவுத்தர்னு. ஒரு நமுட்டுச்சிரிப்பு வேறே!

(தொடரலாமா?) 

சித்திரத்துக்கு நன்றி: நம்ம http://www.heritagewiki.org/images/9/95/Indian_village.jpg

No comments:

Post a Comment