Monday, December 29, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II ~ சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:2





ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:2


இன்னம்பூரான்
29 12 2014

தொடர் கதைன்னா நின்னு கேக்கணும்; அடுத்த வாரத்துக்கு வையிட் பண்ணனும். அந்தக்காலத்திலே சார்லஸ் டிக்கென்ஸ் ஒருத்தர் இருந்தார், எங்கள் போர்ட்ஸ்மத்தில். அவர் நினைவாலயம் கூட அங்கு இருக்கிறது. அவர் நாவல் நாவலாக எழுதிக்குவிப்பார். முதல்லே சீந்துவார் இல்லை. அப்றம் சூடு பிடித்து விட்டது. எக்கச்சக்க சேல்ஸ். போன வருஷம் கூட லைப்ரரியில் புது பதிப்புகளை பார்த்தேன்.  அவருடைய நாவல்கள் தொடர்கதைகளாக வந்து கொண்டிருந்தன. அமெரிக்காவில் அவருக்கு ரசிகர் மன்றமே இருந்தது. ஒரு கப்பலில் வந்து இறங்கிய இதழில் கதை சஸ்பென்ஸ்லெ முடிந்திருக்கும். அடுத்த கப்பல் வரச்சே, ஜனங்கள் எல்லாரும், டென்ஷனா, துறைமுகத்திலே காத்திருப்பார்களாம். ஒத்தர் ஓடோடி வந்து, கண்ணீர் மல்க, ‘சிட்னி காட்டனை தூக்கிலெ போட்டுட்டாங்களா?’ என்று கேட்டாராம்.  அந்த மாதிரி, இது வரை வந்த கதைல்லே ‘சின்சினாட்டிச் சின்னத்தாத்தா’ ஏன் வரவில்லை என்று கேட்டால், என்னால் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல்லே. எனக்கே தெரியாது என்று உண்மையை சொல்லிவிடலாம். அப்ப எல்லாரும் ‘யாருடா, இவன்? புருடா விட்றான்’னு படிக்காம விட்றுவாங்க.
என்னடா பண்ணலாம் என்று ரோசனை பண்ணிக்கொண்டிருக்கும்போதே....
*
ரண்டு நாள் முன்னாலெ .... கல்லூரியில் படித்து 19..ம்வருட ...இயல் முதுகலை தேர்வு எழுதிய கல்லூரி தோழர்களில், அகப்பட்ட ஆறு பேர்கள் ஜிம்கானா கிளப்பில் கூடினோம். மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின், வராத நண்பர்களுக்கு அர்ச்சனை நடந்தது.  சில பாமரகீர்த்தி நினைவு மலர்களும் விகசித்தன. எம்மில் மூவர் சினிமா பிரியர்கள். மாலைக்காட்சி முடிந்து வந்தால், ஹாஸ்டல் துவாரபாலகன் ‘மாலைக்கண்’ மாசிலாமணி கிட்ட மாட்டிக்கொள்வோம். ஜாலியாகவே வரவேற்ற அவருக்கு ஆள்மாறாட்டமாகத்தான் அறிய முடியும். ரஜினிகாந்த் வந்து நின்னால் சிவகுமார் என்பார். சினேகாவை கே.ஆர்.விஜயா என்பார்.  முண்டாசு, குல்லா, கறுப்புக்கண்ணாடி, பொய்மீசை போன்ற உத்திகளால் அவரை நன்றாகவே ஏமாற்றமுடியும்.‘இந்தா ராசா! இந்த ரிஜிஸ்டர்லெ கையெழுத்துப்போடு. சாமி வந்தா ஆயிரம் கேள்வி கேட்கும்’ என்பார், மறைந்த மாமுனிவர் பிரேமானந்தா போல. சரி. பேர் வேண்டாம். அந்த இருவரும் அழகாக ‘வைஜயந்திமாலா’, ‘எம்.கே. தியாகராஜபாகவதர்’ என்று நேர்த்தியாகவே கையொப்பமிட்டு, வந்து படுத்தார்கள். மூன்றமவன் ‘திருவள்ளுவர்’ என்று கையொப்பமிட்டுவிட்டு, சுவரேறி ஓடி விட்டான். 
மறு நாள் காலை எட்டு மணிக்கு ஆராய்ச்சிமணி அடித்தது. போய் நின்னா, கோர்ட் மார்ஷல். என்னோடெ இருபது வருஷ சர்வீஸ்சில் இது எல்லாம் நடந்ததில்லை என்று மாசிலாமணி அலுத்துக்கொண்டார். எள்ளும் கொள்ளுமா வெடித்துக்கொண்டிருந்த சாமியாரிடம் அவருக்கு 
லவலேசமும் பயம் கிடையாது.  அவர் தான் சாமியாரை சின்ன வயசிலேயே பாத்திருக்காறே. கையை கட்டிண்டு பிராக் பார்த்துக்கொண்டிருந்தார். புலன் விசாரணை நடந்தது. எதற்கும் வைஜயந்திமாலாவையும், எம்.கே.டி.ஐயும் கூப்பிடலாமே என்று நான் முணுமுணுத்ததை பாம்புச்செவியாக கேட்ட சாமியார், ‘நீயும் போனாயா?’ என்று கடுமையாக வினாவினார். என்னைத் தான் பிரார்த்தனையில் பார்த்தீர்களே என்று நான் பிராது போடவே, சாமியார் ஜகா வாங்கினார். அது தான் சாக்கு என்று சோமு ( மே ஹிஸ் ஸோல் ரெஸ்ட் இன் பீஸ்.) சொன்னான், ‘சுவாமிஜி! யாருமே வெளியில் போகவில்லை. நான் சாக்ஷி. நன்றாக இருட்டிவிட்டது. அந்த பிரும்மராக்ஷஸ் வந்து இப்டி....’. பேச்சு திசை மாறிப்பயணிக்கவே, நான் பிரார்த்தனை முடியும் முன் ஜன்னல் வழியாக வெளியேறியதை எங்கள் ‘வீபீஷணன்’ கந்தசாமி சொல்ல முடியவில்லை. பிசாசு உண்டு/ இல்லை என்ற வாதத்தினால், வைஜயந்திமாலாவையும், எம்.கே.டி.ஐயும் மறந்து விட்டார்கள். ‘திருவள்ளுவர்’ வந்து போன மர்மமுடிச்சு அவிழ்க்கவேயில்லை. நிராசையாக திரும்பினார், சுவாமிஜி.

அதுவும் இதுவுமாக அரட்டை அடித்து. இனிமையாக பொழுதைப் போக்கினோம். சொல்றதுக்கு நிறைய இருக்கு. என் சைக்கிளின் அசுரபலம், பாலு வீட்டு ஓனர் மகள் காஞ்சனையின் கனவு, பெருமாள் கோயில் உலா, அங்கு மங்கலான ஆஞ்சநேயர் சன்னதி வாசலில் நம்ம குருவும், அவனோட ஆளு சரசாவும் ஊடல்... ஒரு புராணமே இருக்கு. நாங்கள் ஆறு பேருமே அறுபடை வீட்டார் போல குருவோட கல்யாணத்துக்குப் போயிருந்தோம். ஆனால் சரசாவோட இல்லை! அந்தக்கதை ரோமியோ-ஜூலியட் கதையை தோற்க அடித்துவிடும். இன்னொரு நாள் சொல்லணும், கேட்டவாளுக்கு மட்டும். ம்ம். சும்மாச்சொல்லக்கூடாது. அவன் கை தாராளம்.  இங்கிதமாகவே, எங்கள் எல்லாருக்கும் பேண்ட், ஷர்ட் எல்லாம் பரிசில் கொடுத்தான். அதான், இத்தனை நாட்களுக்கு அப்றம் சொல்றேன். நன்றி வேணுமோல்லியோ, சார். அதான், அவா ரண்டு பேரும் போறவரைக்கும் சொல்லலை. 

அந்த சமயம் பார்த்து, தன்னுடைய டையை தளர்த்தி விட்டுக்கொண்ட சுப்புடு, தண்டபாணி, தனை மறந்து தண்டால் போட்ட வைபவத்தை அமர் சித்திரக்கதா போல, தொடர்கதையாக சொல்ல ஆரம்பித்தான். சுப்புடுவோட பாட்டி கோரோஜனை ஜாஸ்தி கொடுத்துட்டா போல இருக்கு. அப்படி ஒரு குரல் அவனுக்கு; ஒரே கூக்குரல், ஆம்படையாளுடன் ரகசியமா பேசச்சவே! எங்கள் பார்ட்டி நடந்தது ஒரு தனி ரூமில். ‘தடால்னு’ ஒத்தர் கதவை திறந்துகொண்டு வந்து,‘என்னை பற்றி இப்படி அவதூறு பேசின சுப்புடுவை விட்டேனா பார்?’ என்று புஷ்டியை உயர்த்தினார். இன்னொரு கைலே விஷ்கி! அதுவும் மத்யான வேளையில்!  நம்ம தண்டபாணி! எல்லாரும் கை தட்டி, வரவேற்று அவனை ஆசுவாசப்படுத்தின பிறகு தான், சுப்புடு விட்ட கதையை விறுவிறுப்பா தொடங்கினான். 
சொல்ல மறந்துட்டேனே. தண்டபாணி டீ ஷர்ட் வாசகம் கொட்டை கொட்டையா சிவப்பு மசியில்.
அதுவும் தமிழில்!
சின்சினாட்டிச்சின்னதாத்தா!!!
(தொடரும்)

No comments:

Post a Comment