Saturday, September 27, 2014

இந்தியா 2014 ~1




இந்தியா 2014 ~1
இந்தியாவின் தற்கால வரலாற்றில் இவ்வருடம்/ இம்மாதம்/ இவ்வாரம் ஒரு நிரந்தரமான, புகழ் மங்காத, என்றும் மகிழ்வுடன் பேசப்படுவதாக அமையும். சில முக்கியமான நிகழ்வுகள்: விண்வெளி சாதனை, மண்ணை குடைந்தெடுத்த பகல் கொள்ளை மீது வெளிச்சம், 1988 வருட சட்டமொன்று மீண்டும் பெற்ற உயிர்மை, உலக அரங்கில் இந்திய பிரதமரின் தெளிவான உரை ஆகியவை. ஒவ்வொன்றை பற்றியும் பலரும் எழுதியிருப்பார்கள். அவற்றை பற்றி சற்றே நீண்ட கட்டுரைகள் இன்றியமையாதவை. எனவே, இந்த பதிவை ஒரு முன்னுரையாக பாவிக்கவும்.
மங்கல்யான் விண்கலம்



இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நவம்பர் 5, 2013 அன்று  அனுப்பிய ஆளில்லா மங்கல்யான் விண்கலம், திட்டமிட்ட படி, இம்மி பிசகாமல், இம்மாதம் 24ம்தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. இந்திய விஞ்ஞானிகளின் சாதனை மெச்சத்தக்கதே. இதனால் யாருக்கு ஆதாயம்? அந்த பணத்தில் ஏழைகளுக்கு மான்யம் கொடுக்கலாமே என்று ஒரு சமூக ஆர்வலர் ஆதங்கப்பட்டார். ஆனால், இந்தியாவில் ஏழைகளின் மான்யத்தை கபளீகரம் செய்தது ஏழைகள் அல்ல. செல்வமும், அதிகாரமும் படைத்தவர்கள். ஆவின் நீர்பால் துரோகம் 1990 திலிருந்து நடப்பதாக, இன்றைய செய்தி. ஏதாவது சிந்திய துளிகள் அவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.பிள்ளையார் கோயிலாண்டி என்றுமே ஊருக்கு இளைத்தவன் தான். இது வரலாறு. இஸ்ரோவுக்கு திரும்புவோம். பல துறைகளில் சாதனை படைப்பதின் மூலம் இந்தியாவுக்கு உலகளவில் மதிப்பு கூடுகிறது என்பதும் உண்மை. எதற்கும் ஒரு நெருடலை ஜீரணித்துக்கொள்வோம். ஊழல் மலிந்த பாரத தேசத்தில் விஞ்ஞானிகள் நிறைந்த இந்திய விண்வெளி மையமும் சிக்கிக்கொண்டது, சிலகாலம் முன்பு. தவறு இழைத்தவர்கள் நீக்கப்பட்டாலும், விவகாரம் தீர்ந்தபாடில்லை.
மண்ணை குடைந்தெடுத்த பகல் கொள்ளை மீது வெளிச்சம்



கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மின் வெளிச்சம் போட, ரயில் வண்டி ஓட்ட, மற்றும் பல ஆலைகள் இயங்க தீனி போடும் நிலக்கரியை தோண்டி எடுப்பதில் மணலை கயிறாக திரிப்பதை விட மாயாஜாலங்கள் செய்து ஊரையும் உலகையும் ஏமாற்றி, ஏழைபாழை கூலிகள் வயிற்றில் அடித்து நடந்த ஊழல்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து, 214 நிலக்கரி சுரங்க ‘முரண்’ உடன்படிக்கைகளை ரத்து செய்து விட்டது. உள்ளதை சொன்னால் உடம்பு எரிச்சல் என்பது சொல்வழக்கு. ஆடிட்டர் ஜெனரல் சொன்னால் கபில் சைபால் போன்ற பிரகஸ்பதிகளுக்கு மூக்கு நுனியில் எள்ளும் கொள்ளுமாக எள்ளல் வெடிக்கும். திரு. சாக்கோ போன்றவர்கள் சாக்கு போக்கு சொல்லி வெள்ளைக்கடுதாசியில் மசி பூசுவார்கள். உச்ச நீதி மன்றம் ஆடிட்டர் ஜெனெரல் போட்ட கணக்கு சரி என்று சொல்லி விட்டது. சட்டவிரோதமாக அனுமதி பெற்ற முதலாளிகள் ஒரு டன்னுக்கு ரூபாய். 295 வசூலிக்கவேண்டும் என்று தீர்வு. உலகளவில் எல்லா நாளிதழ்களும் நம்மீது நமது உற்பத்தியான சகதியை வீசிவிட்டார்கள். மனோஹர் லால் சர்மா என்ற மனுதாரர் அரசுக்கும், அந்த வழியில் மக்கள் இழந்த நஷ்டத்தை விளைவித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். மாட்டிக்கொள்பவர்களில் பிஜேபி கூட்டணியும் உளது. அக்டோபர் 8, 2014 அன்று இது விசாரணைக்கு வரும். அதுவரை அநேகர்கள் வயிற்றில் புளி கரைகிறது. நான் அந்த தீர்வையும் ஊடக செய்திகளையும் முழுதும் படித்தேன். அயோக்கியர்களுக்கு பஞ்சமில்லை, நம் நாட்டில். முழுதும் எழுத மஹாபாரதம் போல் நீண்டு விடும். ஒரு பிள்ளையார் கிடைத்தால், சொல்லிப்போடலாம்.

1988 வருட சட்டமொன்று மீண்டும் பெற்ற உயிர்மை



இன்று எல்லார் வீட்டிலும் இந்த பெங்களூரு வழக்கில் செல்வி. ஜெயலலிதாவுக்கும், அவரது பாங்கிகளுக்கும் கிடைத்த சிறை தண்டனை, அபராதம், ஆங்காங்கே கலவரங்கள், மத்திய அரசின் அறிவுரை வகையறா தான் பேச்சு. Justice delayed is better than Justice denied என்ற தோற்றம். இது கூட முதல் கட்டம் தான். 18 வருடங்களாக இழுத்த ஜவ்வுமிட்டாய் கரைந்து பாகற்காய் சாற்றுடன் கலந்து விட்டது. நான் அந்த வரலாறு படைத்தத் தீர்வை இன்னும் படிக்க இயலாததால், இதற்கு மேல் எழுத வில்லை, திரு. ராஜ்நாத் சிங் சொல்வது போல. இது நிற்க. இங்கிலாந்தில் காரை அதிக வேகத்தில் ஓட்டி, மாட்டிக்கொள்ளாமல் இருக்க மனைவியை பினாமியாக்கிய அமைச்சருக்குப் பொய் சொன்னததற்காக சிறை, அபராதம் எல்லாம். கூட்டுப்பொய்யர் மனைவிக்கும் அவ்வாறே. போதாக்குறையாக, அரசுக்கு ஆன செலவை அவர்களிடமிருந்து வாங்குவதாக ஆர்டர். 

உலக அரங்கில் இந்திய பிரதமரின் தெளிவான உரை




சற்று முன் தான் அவருடைய உரை நிகழ்ந்தது, ஹிந்தியில் பேசினார். ஏற்புடைய வகையில் ஆங்கில சொற்களை கலந்தார். சில மேற்கோள்கள்:
  • இதோ எழுபது வயது ஆகப்போகிறது, நமக்கு. எண்பது வரை காத்திருக்க வேண்டுமா? சீரமைப்புகள் உடனடி தேவை.
  • பாகிஸ்தானுடன் அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார். பயங்கரவாதத்தில் நிழல் கூட படக்கூடாது.
  • உலகை ஒரு குடும்பமாக இந்தியா பாவிக்கிறது. வஸுதேவ குடும்பகம்.
  • இந்தியாவில் பொருளியல், சமுதாய முன்னேற்றங்கள் பெருகி வருகின்றன.
  • சராசரி இந்தியனின் எதிர்ப்பார்ப்புகளை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பயங்கர வாதத்தில் நல்லது/தீயது என்று பாகுபாடு கிடையாது.
  • சர்வதேச யோக தினம் அனுஷ்டிக்கலாம்.

மேலும் பல நற்கருத்துக்களை உரைத்தார். எல்லாரும் பார்த்திருப்பீர்கள். அதனால், இது போதுமே.
சித்திரங்களுக்கு நன்றி: