Saturday, January 3, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:3

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:3



இன்னம்பூரான்
03 01 2015


குறிப்பு? யார், எப்போது, எங்கே, ஏன் என்றா கேட்கிறீர்கள்? ஊகிப்பதில் மன்னர்களும், ராணிகளும் வாழுமிடம் இது அல்லவோ?!
1.2.3....

கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

*

எல்லா கடிதங்களும் தனித்தமிழ் இலக்கியமாக அமைவதில்லை. அவற்றின் பொருள் காண்பது தான்  இவ்விடத்து இலக்கிய விசாரணை என்பது பீடிகையிலேயே சொல்லப்பட்டது. இன்று சற்றே வித்தியாசமான கடிதம், ஏ.ஜி. ஆபீஸ் லீவு லெட்டர் போல: “..pain all over the body...’ மாதிரி இருந்தாலும், எள்ளல் செய்யலாகாது, இதை.

*

மதிப்புள்ள வாத்தியாருக்கு...

நேத்து ராத்திரி

என்னோட அப்பாவை

யாரோ சாதிச்சண்டையிலே

அடிச்சுக் கொண்ணு எரிச்சிட்டாங்க;


அம்மா உடம்பு சரியில்லாம

தர்ம ஆஸ்பத்திரியிலே

படுத்துருக்காங்க.


வேலை தேடி

பட்டணம் போன அண்ணன்

இன்னமும் வீடு திரும்பல;

வயசுக்கு வந்த

என்னோட அக்காவையும்

நாலு நாளா காணலே

என்னோட டவுசர்

பின்பக்கம் கிளிஞ்சி போயிருச்சி

அதனால் ஐயா

இன்று நம் பள்ளியில்

நடை பெறும் சுதந்திர தினவிழாவில்

............

என்னால் வர முடியாது

இப்படிக்கு

உங்கள் கீழ்ப்படிந்துள்ள மாணவன்

கே.குப்புசாமி”


[இது என்னால் எழுதப்பட்டது இல்லை; இரவல்].


குப்புசாமிக்கு லீவு கொடுப்பீங்களா? இல்லையா?

ஒரு எளிய இலக்கிய விசாரணை: கடிதம் உங்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

-#-


சித்திரத்துக்கு நன்றி: https://www.manithan.com/contents/photos/post/thumbs/2013/10/shortfilm_001.w245.jpg





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, January 2, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:2


‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:2

இன்னம்பூரான்
02 01 2015

சில கடிதங்கள் இயல்பாக அமைந்து விடுகின்றன. சில எழுதப்படுகின்றன. சில படைக்கப்படுகின்றன. என் அம்மா எழுதிய கடிதங்களில் சிலவற்றை இன்று பார்வையிட்டேன். இன்லண்ட் கடுதாசி தான் எழுதுவார். ஒரு வெற்றிடம் இல்லாமல் குறிப்புகள் தென்படும். அன்பு தொனிக்கும். அறிவுரை மென்மையாக இருக்கும். விசாரணைக்கெல்லாம் குறைவில்லை. ‘நீ ஸ்னானம் பண்ணுகிறாயா?’ என்று மாட்டுப்பெண்ணுக்கு ஒரு வரி, பிள்ளையார் சுழிக்கு மேலே! அப்பா கடுதாசிலே மார்க் கேட்பார். கண்டனம் இருக்கும். அவருடைய ஆதங்கங்கள் எனக்கு மட்டும் புலப்படும். இவை இயல்பாக அமைந்த கடிதங்கள். நேருஜி-இந்திரா கடிதங்கள் எழுதப்பட்டவை. சிந்தித்து, சிந்தித்து, பல அரிய விஷயங்களை எழுதினார். செஸ்டர்ஃபீல்ட் பிரபுக்கு சாமுவேல் ஜான்சன் எழுதியது படைக்கப்பட்ட வகை. பிற்காலம் இன்னம்பூரானும் இதைப்பற்றி எழுதட்டுமே என்ற முன்யோசனை உள்ளங்கை நெல்லிக்கனி! இத்தனை முஸ்தீபு எதற்கு என்று கேட்பீர்கள். சில கடிதங்களில் படைப்பாற்றல் தென்பட்டாலும், இல்லை, விழுந்து விழுந்து நாட்தோறும் அவர் கடிதங்கள் எழுதினாலும், இயல்பு முத்திரை காணப்படும். அப்படிப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

“...கம்பர் விழாவில் உரைகல்லில் உரைத்து உரைத்துப்பார்த்துத் தெலுங்கு ராமாயணத்துக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். தமிழன் அப்பாவி என்ன செய்வான். பொன்னாடை போர்த்துவதற்கு நாமாவது கிடைத்தோமே என்ற அனுதாபத்தோடு சந்தோஷப்பட்டிருப்பான் அந்த தெலுங்காசாமி. இனி-...நம்முடையவர்களுக்கு ஆஸ்பத்திரியைப் பிரத்யேகமாகத்தான் கட்டவேண்டும். கீழ்ப்பாக்கத்தில் உள்ளது போதாது...தமிழ் பொல்லாத பாஷை என்று தெரிகிறது. தமிழனையே ஏமாற்றி விடுகிறது. அப்படியானால் அயலார் பாடு என்னாகும்! ...எனக்கு உடம்பு சுமாராய் இருக்கிறது...டாக்டர் தினம் வந்து போகிறார்...”. குறிப்பு: ப”பெரிய குழந்தைக்குச் சாப்பாடு ஏற்று வருகிறது. எல்லாம் சரியாய்ப் போய்விடும் நாளை.”
-#-
குறிப்பு? யார், எப்போது, எங்கே, ஏன் என்றா கேட்கிறீர்கள்? ஊகிப்பதில் மன்னர்களும், ராணிகளும் வாழுமிடம் இது அல்லவோ?!

1, 2, 3...

Wednesday, December 31, 2014

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:1




‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:1



மடல் இலக்கியத்தின் தனித்துவம் நிகரற்றது; அறிவுரையும்,ஆளுமையும், கனிவும் இயல்பாகவே, ‘கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போல’ ரசவாதமாக கலந்தோடி வரும்.  மூதுரையில் ஒளவைப்பாட்டி உவமையாக எடுத்துரைத்த தாழம்பூவைப் போல நறுமணத்தின் உறைவிடமாகவும்  மகிழம்பூவைப்போல மணம் தெளிப்பதாகவும் கடிதங்கள் அமையலாம்.  மடலிலக்கியத்தினூடே வம்பு பேசலாம்; குசலம் விசாரிக்கலாம்; அதட்டலாம்; சிந்தை செய்யலாம்; அறிவுரை அள்ளி வழங்கலாம். மனம் போனபடி எழுதும் கலையை வளர்க்கலாம்.  எல்லாம் செல்லுபடியாகும்.  

‘மடல்பெரிது தாழை மகிழினிது’ என்ற தலைப்பில் துவக்கப்படும் இந்த இழை மடல்/கடிதம்/லிகிதம் என்ற வகையில் அமையும் இலக்கிய விசாரணை என்க.  தந்தையிடம் பணம் கேட்டு எழுதும் கடிதம், காதல் கடிதம், மாதவி மடல், அம்மாவிடம் சிபாரிசு கோரும் கடிதம், இலக்கிய விமர்சன கடிதம், அரசியல் கடிதம், அநாமதேயக்கடிதம் எல்லாமே இங்கு இடம் பெறும்.  ஒரு விதத்தில் பார்க்கப்போனால், ‘... ஸுபாஷிணி எழுதி வரும் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் பற்றிய தொடர்  ஒரு நல்ல முன்னுதாரணம். ..’ எனலாம்’. என்று அன்று சொன்னது, இன்று எனக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்து விடுகிறது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் (28 10 12) நான் நாவன்னா காவன்னாவுக்கு எழுதிய மடல்: 

‘என் புரிதல் படி மின் தமிழ், தமிழ் மரபு அறக்கட்டளையின் தோழி, பணிப்பெண் ஆகவும் அன்றாடம் இயங்கினால் நல்லது. மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்களையும், மற்ற பதிவுகளையும் ஆய்வு செய்யலாம். நூல் மதிப்பீடுகள் காணக்கிடைப்பது, அரிதாக இருக்கிறது. அந்தக்குறையை நீக்கலாம். மற்ற மொழிகளிலிருந்து நல்வரவுகள், மொழியாக்கங்கள், சமுதாய முன்னேற்றம் ஆகியவை இடம் பெறலாம். மாணவர்கள் விரும்பும்/ அறிந்து கொள்ள வேண்டிய இடுகைகள் இடம் பெறலாம். ஸுபாஷிணி எழுதி வரும் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரம் பற்றிய தொடர்  ஒரு நல்ல முன்னுதாரணம்.  நாம் லண்டனில் கூடி பேசிய பொழுது, அன்றாடம் புதிய/ தரமுயர்ந்த பதிவுகள் நாட்தோறும் இடம் பெறவேண்டும் என்ற ஆவலை நான் தெரிவித்தது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்’. நேற்று புத்தாண்டு வாழ்த்துக்கள் வழங்கிய ஸுபாஷிணியின் இலக்கும் இவ்வாறு தான் அமைகிறது என்று தோன்றுகிறது. 

நம் நண்பர் திரு.நரசய்யா கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக கிருத்திகாவும் சிட்டியும் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் ஆத்மாவை 2011ல் பிரசுரித்ததை யாம் அறிவோம். அதனை ஒரு நாள் எடுத்து நம்மில் ஒருவர் இங்கு இலக்கிய விசாரனை செய்யலாமே? இன்று புத்தாண்டு தினம். அதன் பொருட்டு, புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி, ஒரு மீள் பதிவு. இந்த இரு மடல்களும் அமர காவியங்கள். குழந்தைகளுக்கு சூதுவாது தெரியாது. அவர்கள் பாராசாரி புரவி போல வெகு வேகமாக பல விஷயங்களை அறிந்து கொள்வது, வினா-விடை தடம் தான் அவர்களுக்கு ராஜபாட்டை. சிறார்களுடன் மடலாடுவது அக்காரவடிசல் உண்பது போல. தித்திக்கும்.
*
‘அன்பார்ந்த ஆசிரியருக்கு,
எனக்கு வயது எட்டு. என்னுடைய சின்ன நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து, ஸாண்டா க்ளாஸ் இல்லை என்கிறார்கள். என் அப்பாவோ, உங்கள் இதழில் ஸாண்டா க்ளாஸ் நிஜம் என்றால் நிஜம் என்கிறார். உண்மை என்ன?
வர்ஜீனியா ஓஹான்லன், 115 , மேற்கு 95 வது தெரு…’
*
வர்ஜீனியா,
உன்னோட ஃப்ரெண்ட்ஸ் சொல்றதெல்லாம் தப்புடா, செல்லம். காலம் கெட்டுக்கிடக்கு, பாரு. எதையும் துருவித்துருவி கேட்டுப்பிட்டு, எதையும் நம்பாத கலி காலம், பாப்பா. உன் கண்ணால் பாத்தியா அப்டினு கேப்பானுக. சிறிசுகள் தானே. அவா மனசுக்கு எட்டாததை இல்லேன்னுடுவா. வர்ஜீனியா! பெரியவாளோ, சின்னவாளோ, எல்லாருக்கும் சின்ன மனசு. இந்த பிரபஞ்சமோ பிரமாண்டம். இவனோ தூசி! அறிவு, ஞானம் எல்லாம் இவனுக்கு தம்மாத்தூண்டு!

ஸாண்டா க்ளாஸ் இருக்கார். வர்ஜீனியா! எங்கெல்லாம் அன்பும், உதாரகுணமும், பக்தியும் இருக்கோ, அங்கெல்லாம் அவர் இருக்கார். அந்த மூணும் தான் அழகு தரது ~ குஷிப்படுத்தறது. நோக்குத் தெரியுமே, அந்த பிரகலாதன் கதை! அன்னிக்கு சாலியமங்கலத்திலெ பாகவத மேளா பார்க்க போனோமே, ஞாபகம் இருக்கோ. நீ தானே அன்னிக்குக்கேட்டே, ‘தூண்லெ மட்டும் தான் பெருமாள் இருப்பாரா’ என்று. எல்லாரும் சிரிச்சவுடனே, உனக்கு ‘ஷை’ ஆயிடுத்து.  ஸாண்டா க்ளாஸ் இல்லேன்னா, லோகமே பேஸ்து அடிக்கும், பாப்பா!, ‘வர்ஜீனியா இல்லேங்கிறமாதிரி!’  அப்டி சொல்ல விட்றுவோமா? எப்டிருக்கு நான் சொல்றது? குழந்தை மாதிரி நம்பிட்றது, பாட்டு, கூத்து, ஜாலி, ஒண்ணுமே இருக்காதே, அம்மா! என்ன! நான் சொல்றது! என்ஜாய் பண்ண முடியாது. கண்டதே காட்சி; கொண்டதே கோலம்னா போரடிக்கும். இந்த லோகத்துக்கே விளக்கு ஏத்தறது மழலையின் கீதம். அதை அணைச்சுட்டா, என்னம்மா பண்றது?

ஸாண்டா க்ளாஸ் மேலெ நம்பிக்கை இல்லெனா, தேவதைகளை நம்பமாட்டே. நீ வாணாலும் அப்பாட்டெ சொல்லி கூலிக்கு ஆள் பிடிச்சு, புகைப்போக்கி சிம்ணி, மொட்டை மாடி, பரண், மச்சு, எல்லா இடத்திலும் தேடச்சொல்லு. என்ன தெரியும்? அவா கண்ணுக்கு அவர் படலை. அவ்வளவு தான்! அவர் இல்லென்னு ஆயிடல்லையே! புரியறதா? நான் சொல்றேன். கேளு. இந்த லோகத்திலெ நிஜத்தைப் பாக்கறது தான் கஷ்டம். பசங்களுக்கும் கண்லெ படாது பெரியவாளுக்கும் கண்லெ படாது. ஆமாம். நீ என்ன தேவதைகள் நம்மாத்து லான் புல்லுமேலே டான்ஸ் ஆடி பாத்திருக்கையா? அதனால அது இல்லெனா எப்டி? நான் சொல்றேன். கேளு. நாம பாக்காததையும், நம்மாலெ பாக்கமுடியாததெயும் இல்லென்னு அசடு தான் அடிச்சுப் பேசும்.

தம்பிப்பாப்பாவொட கிலுகிலுப்பையை பிரிச்சுப்போட்டு, எப்டிறா சத்தம் வருதுன்னு பாக்கலாம். ஆனா, இந்த லோகத்திலெ எல்லாத்தையும் ஏன் பாக்கமுடியலெ தெரியுமா? பனாரசி டிஷ்யூ புடவைன்னு வச்சுக்கோ, அந்த மாதிரி ஒரு தங்கத்திரை ஒண்ணு (ஹிரண்மயேன பாத்ரேண) போட்டு ஜிகுஜிகுன்னு மூடிவச்சுறுக்கா. கிங்க் காங்க் வந்தாக்கூட அதை விலக்கமுடியாது தெரியுமோ? நம்பிக்கை, கற்பனை, கவிதை, அன்பு, லவ்வு அதெல்லாம் வந்தாத் தான், இந்த ஜிகு ஜிகு திரையை விலக்கி ஆனந்தமய கோஷத்தை திவ்யதரிசனம் பண்ணமுடியும், வர்ஜீனியா. நான் ஒண்ணு சொல்றேன். கேட்டுக்கோ. இதுக்கு மேலெ நிஜம்னு,சாஸ்வதம்னு ஒண்ணுமே கிடையாது.

ஸாண்டா க்ளாஸ்ஒம்மாச்சிக்கு தேங்க்ஸ் சொல்லுடா, செல்லம். ஸாண்டா க்ளாஸ் மார்க்கண்டேயனாக்கும். பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டு, அவர் சூப்பர்மார்க்கெட், ஒண்டாரியா மால், சர்க்கஸ், மலைக்கோயில்,ஆம்னிப்ரெஸெண்ட். பெரிய சாக்குமூட்டையெல்லாம் எடுந்திண்டு வந்து குழந்தைகளை குஷிப்படுத்துவார். அப்றம் டிஸெம்பர் 24 அர்த்தராத்ரிலெ, ஆகாசத்திலெ ஊர் சுத்துவார், சக்கரை அம்மாள் மாதிரி. சிம்ணி வழியா இறங்கி வந்து, நீயும், நானும் நட்டு வச்சோமே, அந்த கிருஸ்த்மஸ் மரத்திலெ, உனக்கு கிஃப்ட் எல்லாம் கட்டி வைப்பார்.
என்னை கேட்டா, அவர் தினோம் வரணும். நீ என்ன சொல்றே?
-#-


இன்னம்பூரான்
ஜனவரி 1, 2015

Monday, December 29, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II ~ சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:2





ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:2


இன்னம்பூரான்
29 12 2014

தொடர் கதைன்னா நின்னு கேக்கணும்; அடுத்த வாரத்துக்கு வையிட் பண்ணனும். அந்தக்காலத்திலே சார்லஸ் டிக்கென்ஸ் ஒருத்தர் இருந்தார், எங்கள் போர்ட்ஸ்மத்தில். அவர் நினைவாலயம் கூட அங்கு இருக்கிறது. அவர் நாவல் நாவலாக எழுதிக்குவிப்பார். முதல்லே சீந்துவார் இல்லை. அப்றம் சூடு பிடித்து விட்டது. எக்கச்சக்க சேல்ஸ். போன வருஷம் கூட லைப்ரரியில் புது பதிப்புகளை பார்த்தேன்.  அவருடைய நாவல்கள் தொடர்கதைகளாக வந்து கொண்டிருந்தன. அமெரிக்காவில் அவருக்கு ரசிகர் மன்றமே இருந்தது. ஒரு கப்பலில் வந்து இறங்கிய இதழில் கதை சஸ்பென்ஸ்லெ முடிந்திருக்கும். அடுத்த கப்பல் வரச்சே, ஜனங்கள் எல்லாரும், டென்ஷனா, துறைமுகத்திலே காத்திருப்பார்களாம். ஒத்தர் ஓடோடி வந்து, கண்ணீர் மல்க, ‘சிட்னி காட்டனை தூக்கிலெ போட்டுட்டாங்களா?’ என்று கேட்டாராம்.  அந்த மாதிரி, இது வரை வந்த கதைல்லே ‘சின்சினாட்டிச் சின்னத்தாத்தா’ ஏன் வரவில்லை என்று கேட்டால், என்னால் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல்லே. எனக்கே தெரியாது என்று உண்மையை சொல்லிவிடலாம். அப்ப எல்லாரும் ‘யாருடா, இவன்? புருடா விட்றான்’னு படிக்காம விட்றுவாங்க.
என்னடா பண்ணலாம் என்று ரோசனை பண்ணிக்கொண்டிருக்கும்போதே....
*
ரண்டு நாள் முன்னாலெ .... கல்லூரியில் படித்து 19..ம்வருட ...இயல் முதுகலை தேர்வு எழுதிய கல்லூரி தோழர்களில், அகப்பட்ட ஆறு பேர்கள் ஜிம்கானா கிளப்பில் கூடினோம். மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின், வராத நண்பர்களுக்கு அர்ச்சனை நடந்தது.  சில பாமரகீர்த்தி நினைவு மலர்களும் விகசித்தன. எம்மில் மூவர் சினிமா பிரியர்கள். மாலைக்காட்சி முடிந்து வந்தால், ஹாஸ்டல் துவாரபாலகன் ‘மாலைக்கண்’ மாசிலாமணி கிட்ட மாட்டிக்கொள்வோம். ஜாலியாகவே வரவேற்ற அவருக்கு ஆள்மாறாட்டமாகத்தான் அறிய முடியும். ரஜினிகாந்த் வந்து நின்னால் சிவகுமார் என்பார். சினேகாவை கே.ஆர்.விஜயா என்பார்.  முண்டாசு, குல்லா, கறுப்புக்கண்ணாடி, பொய்மீசை போன்ற உத்திகளால் அவரை நன்றாகவே ஏமாற்றமுடியும்.‘இந்தா ராசா! இந்த ரிஜிஸ்டர்லெ கையெழுத்துப்போடு. சாமி வந்தா ஆயிரம் கேள்வி கேட்கும்’ என்பார், மறைந்த மாமுனிவர் பிரேமானந்தா போல. சரி. பேர் வேண்டாம். அந்த இருவரும் அழகாக ‘வைஜயந்திமாலா’, ‘எம்.கே. தியாகராஜபாகவதர்’ என்று நேர்த்தியாகவே கையொப்பமிட்டு, வந்து படுத்தார்கள். மூன்றமவன் ‘திருவள்ளுவர்’ என்று கையொப்பமிட்டுவிட்டு, சுவரேறி ஓடி விட்டான். 
மறு நாள் காலை எட்டு மணிக்கு ஆராய்ச்சிமணி அடித்தது. போய் நின்னா, கோர்ட் மார்ஷல். என்னோடெ இருபது வருஷ சர்வீஸ்சில் இது எல்லாம் நடந்ததில்லை என்று மாசிலாமணி அலுத்துக்கொண்டார். எள்ளும் கொள்ளுமா வெடித்துக்கொண்டிருந்த சாமியாரிடம் அவருக்கு 
லவலேசமும் பயம் கிடையாது.  அவர் தான் சாமியாரை சின்ன வயசிலேயே பாத்திருக்காறே. கையை கட்டிண்டு பிராக் பார்த்துக்கொண்டிருந்தார். புலன் விசாரணை நடந்தது. எதற்கும் வைஜயந்திமாலாவையும், எம்.கே.டி.ஐயும் கூப்பிடலாமே என்று நான் முணுமுணுத்ததை பாம்புச்செவியாக கேட்ட சாமியார், ‘நீயும் போனாயா?’ என்று கடுமையாக வினாவினார். என்னைத் தான் பிரார்த்தனையில் பார்த்தீர்களே என்று நான் பிராது போடவே, சாமியார் ஜகா வாங்கினார். அது தான் சாக்கு என்று சோமு ( மே ஹிஸ் ஸோல் ரெஸ்ட் இன் பீஸ்.) சொன்னான், ‘சுவாமிஜி! யாருமே வெளியில் போகவில்லை. நான் சாக்ஷி. நன்றாக இருட்டிவிட்டது. அந்த பிரும்மராக்ஷஸ் வந்து இப்டி....’. பேச்சு திசை மாறிப்பயணிக்கவே, நான் பிரார்த்தனை முடியும் முன் ஜன்னல் வழியாக வெளியேறியதை எங்கள் ‘வீபீஷணன்’ கந்தசாமி சொல்ல முடியவில்லை. பிசாசு உண்டு/ இல்லை என்ற வாதத்தினால், வைஜயந்திமாலாவையும், எம்.கே.டி.ஐயும் மறந்து விட்டார்கள். ‘திருவள்ளுவர்’ வந்து போன மர்மமுடிச்சு அவிழ்க்கவேயில்லை. நிராசையாக திரும்பினார், சுவாமிஜி.

அதுவும் இதுவுமாக அரட்டை அடித்து. இனிமையாக பொழுதைப் போக்கினோம். சொல்றதுக்கு நிறைய இருக்கு. என் சைக்கிளின் அசுரபலம், பாலு வீட்டு ஓனர் மகள் காஞ்சனையின் கனவு, பெருமாள் கோயில் உலா, அங்கு மங்கலான ஆஞ்சநேயர் சன்னதி வாசலில் நம்ம குருவும், அவனோட ஆளு சரசாவும் ஊடல்... ஒரு புராணமே இருக்கு. நாங்கள் ஆறு பேருமே அறுபடை வீட்டார் போல குருவோட கல்யாணத்துக்குப் போயிருந்தோம். ஆனால் சரசாவோட இல்லை! அந்தக்கதை ரோமியோ-ஜூலியட் கதையை தோற்க அடித்துவிடும். இன்னொரு நாள் சொல்லணும், கேட்டவாளுக்கு மட்டும். ம்ம். சும்மாச்சொல்லக்கூடாது. அவன் கை தாராளம்.  இங்கிதமாகவே, எங்கள் எல்லாருக்கும் பேண்ட், ஷர்ட் எல்லாம் பரிசில் கொடுத்தான். அதான், இத்தனை நாட்களுக்கு அப்றம் சொல்றேன். நன்றி வேணுமோல்லியோ, சார். அதான், அவா ரண்டு பேரும் போறவரைக்கும் சொல்லலை. 

அந்த சமயம் பார்த்து, தன்னுடைய டையை தளர்த்தி விட்டுக்கொண்ட சுப்புடு, தண்டபாணி, தனை மறந்து தண்டால் போட்ட வைபவத்தை அமர் சித்திரக்கதா போல, தொடர்கதையாக சொல்ல ஆரம்பித்தான். சுப்புடுவோட பாட்டி கோரோஜனை ஜாஸ்தி கொடுத்துட்டா போல இருக்கு. அப்படி ஒரு குரல் அவனுக்கு; ஒரே கூக்குரல், ஆம்படையாளுடன் ரகசியமா பேசச்சவே! எங்கள் பார்ட்டி நடந்தது ஒரு தனி ரூமில். ‘தடால்னு’ ஒத்தர் கதவை திறந்துகொண்டு வந்து,‘என்னை பற்றி இப்படி அவதூறு பேசின சுப்புடுவை விட்டேனா பார்?’ என்று புஷ்டியை உயர்த்தினார். இன்னொரு கைலே விஷ்கி! அதுவும் மத்யான வேளையில்!  நம்ம தண்டபாணி! எல்லாரும் கை தட்டி, வரவேற்று அவனை ஆசுவாசப்படுத்தின பிறகு தான், சுப்புடு விட்ட கதையை விறுவிறுப்பா தொடங்கினான். 
சொல்ல மறந்துட்டேனே. தண்டபாணி டீ ஷர்ட் வாசகம் கொட்டை கொட்டையா சிவப்பு மசியில்.
அதுவும் தமிழில்!
சின்சினாட்டிச்சின்னதாத்தா!!!
(தொடரும்)