Thursday, February 12, 2015

சிரிச்சு மாளலெ ~ 13: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)

சிரிச்சு மாளலெ ~ 13:
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)
இன்னம்பூரான்
12 02 2015

உஷ்! உஷ்! யஷ் பற்றிய கொஷ்யன்ஸும் வழவழா கொழகொழா ஆன்ஷர்ஷும்! ஒரு கோர்ட் சாட்சியமும், அதை சார்ந்த உரையாடல் பற்றி எழுத நினைத்தால், இன்று ஒரு புத்தகம் வந்து எம்மை அலக்கழிக்கிறது. பிரபல பென்குவின் பிரசுராலயம். ஷோபா டே என்ற பிரபல மாமியின் பிரிவு. தலைமாந்தர் யஷ் பிர்லா என்ற செல்வந்தர். சின்ன வயது; பெரிய வம்சாவளி; அண்ணல் காந்திக்கு போஜனம் அளித்த கஜானன் பிர்லா தான் மூதாதையர். புத்தகத்தில் அவருடைய திவாலாகும் நிலையில் உள்ள வணிகங்களை பற்றி அதிகம் சொல்லாமல், யஷ்ஷின் சார்லஸ் அட்லாஸ் தேகவாகு (நம்ம ராபர்ட் வடேரா மாதிரி!), கலையார்வமான பச்சைக்குத்தல், ஃபேஷன் மேலும் மேற்குடி வாழ்க்கை தான் எடுபடுகிறது என்கிறார், புத்தக விமர்சகர். இது நிற்க. கனம் கோர்ட்டார் கூப்பிடுகிறார்.

ஒரே ஒரு கிராமம். அங்கு ஒரு யஷ் பிர்லா கம்பெனி. சாட்சி & சாட்சி என்ற விளம்பரகம்பெனி தங்களுக்கு வரவேண்டிய தொகை வரவில்லை என்று சாட்சியத்துடன் ஆகஸ்ட் 2014ல் வழக்குத் தொடர, கோர்ட்டாரும் கதவை இழுத்து மூட ஆணையிட்டனர்.
போதாக்குறையாக, கம்பெனி கிட்டங்கியிலிருந்து துர்நாற்றம் என்று கிராம பஞ்சாயத்து புகார் கொடுத்தும், கேட்பாரில்லை. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார்கோயில் ஆண்டி இல்லையா? யஷ் பிர்லா அவர்களே கோர்ட்டில் வந்து சாட்சியம் சொல்ல வேண்டும் என்று ஃபெப்ரவரி 5 அன்று ஆணை. இது சம்பந்தமான இரண்டு நாட்கள் முன்னால் நடந்த கோர்ட் உரையாடல்:

நீதியரசர் கதாவாலா: உமது கம்பெனியின் டைரக்டர்களாக, உமது சமையற்காரனையும், எடுபிடியையும் அமர்த்தியது யார்?

யஷ் பிர்லா: நான் இல்லை.

நீதி: உமது கம்பெனியின் டைரக்டர்களாக, உமது சமையற்காரனையும், எடுபிடியையும் இருப்பது, உமக்கு தெரியுமா?

ய: தெரியும்,இப்போது தான்.

நீ: அவர்களை அமர்த்தியது யார்?
ய: என்னுடைய ஊழியர்கள்.
(ஃபெப்ரவரி 5 அன்று இந்த சமையற்காரனும், எடுபிடியும் கிஞ்சித்துக்கூட ஆங்கிலம் தெரியாதவர்கள், ஐந்தாம் வகுப்பும் ஆறாம் வகுப்பும் வரை படித்த அவர்களுக்கு ஹிந்தி கூட தொந்தரவு தான் என்றும், அவர்கள் இருவரும் மூன்றாம் நபரும் ஒரு போர்ட் மீட்டிங்க் கூட வராதவர்கள் என்று அறிந்த நீதிபதி திடுக்கிட்டுப்போய் தான் முதலாளியை வரச்சொன்னார்.)
நீ: இந்த மாதிரியான கடை நிலை வேலைக்காரர்களை டைரக்டர்களாக யார் நியமித்து இருப்பார்கள்?
ய: என் ஊழியர்களுக்கும் இந்த கடை நிலை வேலைக்காரர்களுக்கும் பரிச்சயம் உண்டு. அவர்கள் இவர்களை நியமித்திருக்கலாம்.
நீ: உண்மை பேச கற்றுக்கொள். கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது. உன்னுடைய வக்கீலே உன்னை நம்பியிருக்கமாட்டார். உங்கள் ஆட்கள் உண்மையை கக்கிவிட்டனர்.

நவ்ரோஜ் சீர்வை (யஷ்ஷின் வக்கீல்) உங்கள் 5ம்தேதி ஆணையை எதிர்த்து விண்ணப்பிப்பதாக இருந்தோம்.
நீ: (குழப்பத்துடன்) என்னது இது? கோர்ட்டுக்கு வா என்றால் அப்பீலா!!!???
ஆமாம். கம்பெனியில் உங்கள் முதலீடு எத்தனை?
ய: 0.01%, தொடக்கத்திலிருந்து அதே.
நீ: ஓ! கம்பெனியை ஆரம்பிச்சு அடியாட்களை டைரக்டர்களாக்கி, நீ கழண்டு விட்டு..
என்ன சொல்ல விரும்புகிறாய்?
ய: கோர்ட்டார் சொன்னபடி செய்யறேன்.
நீ: நான்கு வாரங்களுக்குள் உண்மை விவரங்கள் கூறி, துர்நாற்றத்தை ஒழி.



pastedGraphic.pdf 

உசாத்துணை

பின்குறிப்பு: எனக்கு இவர் யார் என்று லவலேசமும் தெரியாது. யாதொரு விதமான காழ்ப்புணர்ச்சி இல்லாமல் கோர்ட்டில் நடந்ததை உள்ளது உள்ளபடி சொன்னேன். கொஞ்சம் தேடிப்பார்த்தாலே தலை சுற்றுகிறது. அத்தனை குற்றச்சாட்டுக்கள். ஆக மொத்தம் மக்கள் ஏமாற்றப்படுவது தெரிகிறது. சம்பந்தம் இல்லாத இரு விஷயங்கள்.
நான் ஒரு கம்பெனியில் டைரக்டராக அரசு நியமனம். முதலாளி தபால் தலை சேகரிப்பவர். ஆயிரக்கணக்கில் செலவு செய்து விட்டு, கம்பெனி அஞ்சல் செலவில் கலவி செய்து விடுவார்கள். நான் ராஜிநாமா செய்தேன். ஒரு ஜோக் சொல்வார்கள். கம்பெனி ஆடிட்டர்கள் ‘என்ன சாமான்களை பேக் செய்யாமலே பேக்கிங்க் செலவு எக்கச்சக்கம் ஆனது?’. கம்பெனி காரியதரிசி ரகசியமாக வந்து சொன்னாராம், ‘அப்பன் செத்துட்டான். சவ அடக்க செலவை கம்பெனி மேல் போட்டுட்டான்’ எப்படி?.

-#-
Those who cannot read Tamil can read the news item, by clicking on the reference.

No comments:

Post a Comment