Tuesday, July 7, 2015

கில்ஜாய்’ கோமளா மாமி: Mark II

இது ஒரு மீள்பதிவு:
*
இதுவும் ஒரு பிரகிருதி
கில்ஜாய்’ கோமளா மாமி

இன்னம்பூரான்

ராஜா பாதர் தெருவிலே அந்த நெய்கொட்டான் மரத்துக்குப் பக்கத்து முடுக்கு தெருவில் மூணாவது வீட்டில்  ஏழாவது ஒண்டுக்குடித்தனக்காரி தான் அவள். நாப்பதிலெருந்து அறுபது வயசுக்குள்ளெ. ஒரு நாள் கைகேயி மாதிரி விரித்த தலை அலங்கோலமா நிக்கச்சே அறுபது வயசுன்னு தோணும். அவளே ஆரணி பட்டுப்புடவை சரசரக்க கார்த்திகை தீபம் ஏத்தச்சே நாப்பது வயசு மாதிரின்னு, (நான் என்னத்தைக்கண்டேன்.) சுடுகஞ்சி ஆராமுது சொன்னான்.  அவனுக்கு சுடுகஞ்சின்னு பேர் வச்சதே, அவள் தானே. அந்த கதை பெரிய கதை. சொன்னா, ஊர் சிரிச்சுப் போய்டும். தூணுக்குப் புடவை கட்டினாக்கூட மோகித்து போற ஆராமுது ஒரு பொம்மனாட்டிப்பித்து. இவ கிட்ட எங்கே மாட்டிண்டான், எப்போ மாட்டிண்டான், எதுக்கு மாட்டிண்டான்னு கேட்டா மழுப்புவான். நாக்கைத்துருத்தி சிரிச்சுப்பான். ‘போடா! சோப்ளாங்கி! உனக்கு வயசு பத்தாது’ என்று சொல்லி கை கொட்டி சிரிப்பான். உனக்கு இங்கிலீஷ் தெரியுமோ? இனண்டோ னு ஒரு வார்த்தை. சொல்லாம சொல்றது. தண்டியலங்காரத்திலெ விபாவனை அணி, விபரீத அணி என்றெல்லாம் சொல்றாளே, அது மாதிரியா ன்னு கேட்காதே. நான் என்னத்தைக்கண்டேன்? படித்துக் கரை கண்டவாளைக்கேளு. எது எப்படியோ? ‘சுடுகஞ்சியின்’ இனண்டோ எல்லாம் பொய். 

வாழாவெட்டின்னு கோமளா மாமியை பத்தி அம்புஜம் பாட்டி அலுத்துண்டா ஒரு நாள், அவளோட நாராசம் பொறுக்காம. வாஸ்தவம். அவளோட துக்கிரிநாக்குலெ மாட்டிண்டா சீதாப்பிராட்டியார் கூட தப்ப முடியாது. இந்து நேசன் தோத்தது போங்கோ. அப்டி படுக்கையறை மர்மங்களை, நேரில் பார்த்தமாதிரி அடுக்கிண்டு போவாள், குழாயடி வம்பின் போது. சிறுசுகள் எல்லாம் வாயை பிளந்துண்டு கேக்கும். பெரிசுகள் காதைப் பொத்திப்பா; செவியை தீட்டிப்பா. குடக்கூலியை ஒழுங்கா முதல் தேதியே, ‘தண்ணி வரல்லை; ஓடு மாத்தினாத்தானே, ஒரே தேளு; சாக்கடை அடச்சுண்டு இருக்கு.’ இப்படி லொட்டு, லொசுக்கு மண்ணாங்கட்டி என்று ஆயிரம் கம்ப்ளையிண்டோட கொடுப்பாளா, ஸ்டோர் ஓனர் மணி ஐயருக்கு ஒரு மாதிரியா இருக்கும். மெல்லவும் முடியாது; துப்பவும் முடியாது. ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். ‘கில்ஜாய்’ கோமளா மாமி குடித்தனம் இருந்தாலும் பிரச்னை. காலி பண்ணாலும் பிரச்னை.

ஒரு உரையாடல்:

மணி ஐயர் (தனி மொழி): தெரியாமலா ‘கிருத்திரமம்’ கிட்டு அவளுக்கு ‘கில்ஜாய்’ னு பேர் வச்சான். ஊரையே வாழாவெட்டியாக பண்ணிடுவாளே! ( செயற்கை புன்வறுவல் வரவழைத்துக்கொள்கிறார்).

மணி ஐயர்: கோமளம்! (அவர் பார்வை அப்போ சரியாக இருக்காது. கோமளத்தின் கண்ணிலிருந்து அது தப்ப முடியுமோ? ஊஹூம்!) போனமாசம் தானே வடிவேலு சாக்கடையை க்ளீன் பண்ணான்.  நான் சொன்னா நன்னா இருக்காது. நீ கண்ட குப்பையை போட்றே. அதான்.

‘கில்ஜாய்’ கோமளம்: ‘ஐயர்வாள்’! நீங்க சொல்றது உங்களுக்கே நன்னாருக்கா! எச்சுமி மாமீ! (மணி ஐயரின் பார்யாள்) உங்காத்து....

மணி ஐயர்: (தனி மொழி) ஊர் வம்புனா அவளுக்கு லட்டு தின்ன மாதிரி.  வாய்ச்சவுடால்லெ அவளை மிஞ்சறத்துக்கு ஆள் பிறக்கணும். அதான் அவ புருஷன் ‘வெத்துவேட்டு’ வெங்கிட்டு காததூரம் ஓடிப்போயிட்டான்.
*
மணி ஐயருக்கு சமாதானம் ஆகல்லெ. எந்த புத்துலெ எந்த பாம்பு இருக்கோ? ‘கில்ஜாய்’ கவுத்துவிட்டுட்டா! முனிசிபாலிட்டிக்கு அநாமதேய மனு  கொடுத்தாட்டாள்ணா! எதற்கும் ஆலோசனை கேட்போம் என்று அம்புஜம் பாட்டியாத்துக்குப் போனார். மாயவரத்திலேயே அவள் ஒரு விஐபி. சிங்கிள் உமன் பஞ்சாயத்து. அவளுடைய ஹஸ்பெண்ட் ராகவைய்யங்காருக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆஸ்திகர். நேர்மையான வக்கீல். அவர் காலத்துக்கு அப்றம் அம்புஜம் மாமி எலெக்ஷனுக்கு நிற்க வில்லையே தவிர, அவள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஐபி. அவள் சொன்னாள், “மணி! சில பேர் போக்கை மாத்தமுடியாது. கோமளம் கேட்டதைப் பண்ணி கொடுத்துடு. அவளும் ஒண்ணு கிடக்க ஒண்ணு கேட்டுண்டு தான் இருப்பாள்.’ 
இன்னம்பூரான்
27 11 2013
இன்னம்பூரான்



*
திரு. இன்னம்பூரான்!
இது எங்கே எழுதியது? எதற்கு எழுதியது? யார் எழுதியது என்று கேட்கத்தேவையில்லை. நீங்கள்தான் என்று யூகிக்கின்றேன். படிக்க சுவாரசியமாக இருந்தது. வட்டார வழக்கு பலே!
ப.பாண்டியராஜா
*
நன்றி, ஐயா,
அடியேன் தான் அஞ்சு நிமிடம் முன்னால் என்னுடைய பொழுதுபோக்குக்காக  எழுதியது.  நான் தான் உசாத்துணை ஆசாமியாச்சே. மற்றவர்கள் படைப்பு என்றால் சொல்லி விடுவேன். சொற்கள் இரவல் வாங்கலாம். அவை பொது சொத்து. இது ஒரு தொடர். எண்ணிக்கை மறந்து விட்டேன். எல்லா பிரகிருதிகளும் யான் அனுபவத்தில் கண்ட மாந்தர்களே.
இன்னம்பூரான்
*
அருமையான அனுபவங்கள் - இயல்பான கதைமாந்தர் - சரளமான நடை - இனிமையான பகிர்வு தங்களது. தொடருங்கள்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
*
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்...சீதாப்பிராட்டியார் கூட தப்ப முடியாது. இந்து நேசன் தோத்தது போங்கோ. அப்டி படுக்கையறை மர்மங்களை, நேரில் பார்த்தமாதிரி அடுக்கிண்டு போவாள், குழாயடி வம்பின் போது. சிறுசுகள் எல்லாம் வாயை பிளந்துண்டு கேக்கும். பெரிசுகள் காதைப் பொத்திப்பா; செவியை தீட்டிப்பா.
சிறுசா இருந்தால் வாயைப் பிளந்துண்டு கேக்கலாம்,
பெரிசா இருந்தால் காதைப் பொத்திக்கிட்டு செவியைத் தீட்டிக்கலாம்,

நான் 
இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.
நான் 
இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.

Your are a social auditor என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

அன்பன்
*
இது சிறுகதை இல்லை.
கடுகுக்கதை.
மூட்டைக்காரம் உள்ளே.
பொம்மனாட்டின்னு
கொஞ்சம் ஈரங்காட்டினா
அந்த பொம்மனாட்டிகளுக்கே
ஆயிரம் துரோகம் அது.
நாட்டாம மாமிக்கே
நடுக்கம் தான்.
மனுஷாளை
தோல உரிக்காமலேயே
அவா
நெறம் உரிச்சு
நன்னாக்காட்டிட்டேள்.
ய ஒன்டர்ஃபுல் ஸ்கெட்ச் ஆஃப்
ஹ்யூமன் பெர்ஸனாலிடி.
"இனா"ன்னா
இமயம் தான்
"சொல்"லையே பல்ல புடிச்சு
வித்தை காட்டுவதில்.
-ருத்ரா பரமசிவம்
*
ேரிலியே நடப்பது போன்ற ஒரு நடை 
அருமை 
வாழ்த்துகள் ஐயா 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
*
இவாளால்லாம் பேசிக்கிறதைப் பாத்தா, அதுவும் ருத்ர வீணையிலேயே 'ய ஒன்டர்ஃபுல் ஸ்கெட்ச் ஆஃப் ஹ்யூமன் பெர்ஸனாலிடி.' அப்டிண்ணு மீட்டிப்பிட்டா என்றால், அடுத்த கட்டத்துக்குக் காய் நகர்த்தலாமோ, ஐயாமார்களே, அம்மாமார்களே?
இன்னம்பூரான்
01 12 2013
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://orig05.deviantart.net/af39/f/2015/165/f/8/the_killjoys_by_autirobo1996-d8xcv7m.png

No comments:

Post a Comment