Wednesday, October 21, 2015

ஒரு இரங்கல் கடிதம்

ஒரு இரங்கல் கடிதம்





இன்னம்பூரான்
21 10 2015
எனது நண்பர் வெ.சா. அவர்களின் குடும்பத்தினருக்கு நான் வரையும் மடல், இது. 

கடிதம் நாம் எல்லாருக்கும் போடுவதில்லை. ஏனெனில், அதில் ஒரு தனித்துவம் உளது. பின்னணி உளது; நேயம் உளது; அன்யோன்யம் உளது. எனக்கு வெ.சா. உடன்பிறந்தவர் மாதிரி. இருவரும் சமவயதினர். அதனால், மனம் திறந்து பேசுவதற்கு, கடிதம் போன்ற நிகரற்றதொரு  சாதனம், தேவை. ஆனால், வெ.சா. அவர்கள் ஒரு பொது சொத்து. அதனால், இணையதளம் என்ற பாதாளகங்கையில் என்னுடன் கிரீடை செய்யும் அருமை நண்பர்களுக்கும் இது அனுப்பப்படுகிறது. எதற்கும், முன்சாக்கிரதையாக,இதை அவரவருக்கு அனுப்பிய தனிமடலாக பாவிக்கவும் என்று வேண்டிக்கொள்கிறேன். அவரவர் விருப்பப்படி நடக்கட்டும். 

எனக்கு உடனே மனதில் தைத்த கவிதை, மாயா ஏஞ்சலோ எழுதிய ஒரு அருமையான பாடலில் கீழே கண்ட பகுதி:

‘...Great souls die and
our reality, bound to
them, takes leave of us.
Our souls,
dependent upon their
nurture,
now shrink, wizened.
Our minds, formed
and informed by their
radiance,
fall away.
We are not so much maddened
as reduced to the unutterable ignorance
of dark, cold
caves...’

“சான்றோர்கள் ஆவி துறந்தால், அவர்களொடு ஒட்டி இருந்த நமது நிதர்சனம் நம்மிடமிருந்து விலகி விடுகிறது. அவர்களால் வளர்க்கப்பட்ட நமது ஆத்மா வாடிப்போய் சுருங்கி விடுகிறது. அவர்களின் ஒளியில் உறையும் நமது மனசுகள் 
சுக்குநூறாகி விழுந்து விடுகின்றன. நமது அறிவு மங்கிவிட்டது என்பதை விடகீழ்த்தரமான அறியாமையில் முழுகி விடுகிறோம்.”

இன்றைய விக்கிப்பீடியாவில் அவரது மறைவு கூறப்பட்டுள்ளது என்பதிலிருந்து, அவரது தமிழ் ஆளுமையை பற்றி சற்றே அறிந்துகொள்ளலாம். பின்னோக்கிப்பார்த்தால், தமிழின் மறுமலர்ச்சி காலகட்டதில், கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன், அவர் தமிழ் ஜாம்பவான்களுடன் சரி சமானமாக உறவு கொண்டாடியவர். ந. பிச்சமூர்த்தி அவர்களின் இலக்கியபயணத்தை நமக்கு உணர்த்தியவர், வெ.சா.  இலக்கியத்தில் அவருடைய பன்முகத்தை பற்றி கூகிளை கேட்டால், அரை நிமிடத்தில் வரும் ஐம்பதாயிரம் பதிவுகள் சாட்சி. தமிழ் இலக்கிய விமர்சனத்தின் மூதாதையர்கள் இருவர்: க.நா.சுப்ரமண்யம் & சி.சு.செல்லப்பா. முந்தியவர், ‘... என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்...’ என்றார். ‘... சாமிநாதனது பேனா வரிகள் "புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது" என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும்...; என்றார், பிந்தியவர். என்னை கேட்டால், அவருக்குக் கழுதையும் அத்துப்படி என்பேன். அவர் எழுதிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ யை ஜான் அப்ரஹாம் சினிவாக எடுக்க அது திரையுலகில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மஹாகவி சுப்ரமண்ய பாரதியாருடன் இவரை ஒப்பிடும் சுந்தர ராமசாமி,  ‘...பாரதியோ ஒரு உணர்ச்சிக் கவிஞன். தேசியக் கவிஞன்; புரட்சிவாதி. அவனது இயற்கையான முகங்கள் அனைத்தும் நம்மவர்கள் இயற்கையாகவே புரிந்துகொள்ளாமல் போற்ற வசதியானவை. வெ.சாவின் உலகமோ, புரிந்து கொள்ளும் ஆற்றலை தீவிரமாகக் கேட்டு நிற்கிறது...’  என்கிறார். தமிழ் மொழியின் இளம் பிள்ளையாக ( சிலர் இளம்பிள்ளை வாதம் என்பர். சொல்லிவிட்டுப்போகட்டும். ஹூ கேர்ஸ்?) ஏழெட்டு வருடமாக தமிழ் மாணாக்கனாக வந்த என் தமிழ் உரைநடையை, அத்தகைய தமிழறிஞர் வெ.சா. அவர்கள் மனமார அடிக்கடி போற்றியது அவரது பெருந்தன்மை. எனக்கு  ஒரு மலர்மாலை என்க. அதில் பூரித்து இருக்கும் எனக்கு அவர் மற்றுமொரு பொன்மாலை அணிவித்தார். தமிழ் பேப்பர் என்ற இதழில், அ.முத்துலிங்கம் அவர்கள்,’ சில நேரங்களில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் போன்றவர்களைச் சந்தித்தப்போது புத்தகங்களில் அவர்களுடைய கையெழுத்துகளைப் பெற்றிருக்கலாமே என்று நினைத்ததுண்டு.’ என்று அங்கலாய்த்திருக்கிறார். எனக்கோ, வெ.சா. அவர்களின் கையெழுத்துடன் அவருடைய நூல்களின் மூன்று, பெங்களூரிலிருந்து, பறந்து வந்தன. நான் பெருமிதம் கொள்ளலாகாதா!

அவர் ஒருமுறை நானில்லாத சபையில் என்னை மனதளவில் அமர்த்தி அழகு பார்த்தார். அடுத்த தடவை ஒரு சிறிய தமிழறிஞர் குழுவுக்கு என்னை வரவழைத்தார். சில மணி நேரங்கள், ஆல்பெர்ட் ஈன்ஸ்டீனின் சில வினாடிகளாக சொகுசாகக் கழிந்தன. அடுத்த சென்னை வருகையின் போது தான் பேராசிரியரும் நானும் அவரை சந்தித்தோம். திரு.நரசய்யா அவர்களையும் அழைத்துத்தான் போவதாக உத்தேசம். உடனுக்குடன் புறப்பட வேண்டியிருந்ததாலும், கை பேசிகளின் மவுனத்தினாலும், அது நடக்க வில்லை என்பது எனக்கு வருத்தம் தான்.

இது சம்பிரதாயமான கடிதம் இல்லை என்பதால், திரு.வெ.சா. அவர்களின் நினைவஞ்சலியாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது என் பிரார்த்தனை.

அன்புடன்,
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி (இது அவருக்குப்பிடித்தப்படம்)  https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/d/d4/VenkatSwaminathan.jpg/220px-VenkatSwaminathan.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com

No comments:

Post a Comment