Thursday, July 21, 2016

'தானாய் வந்ததால் வீணாய் போனதோ வேதம்!'

இன்னம்பூரான் வலைப்பூ வாசகர்களில் சிலருக்கு இந்த கட்டுரை உகந்ததாக படலாம் என்பதால், தினமலருக்கு நன்றி கூறி, இத மீள்பதிவு செய்கிறேன்.
இன்னம்பூரான்
22 07 2016



'தானாய் வந்ததால் வீணாய் போனதோ வேதம்!'


பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016 
23:44


திவாகர நிகண்டு, தொல்காப்பியம், திருமந்திரம், பொய்யாமொழி உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில், வேதங்கள் பலவாறாக போற்றப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வேதங்கள் மொழி பெயர்க்கப்படாமல் இருந்தது. இந்த குறை, 19ம் நுாற்றாண்டில், த.ப.ராமசாமி பிள்ளையால் களையப்பட்டது.

இதுகுறித்து, சமூக, பண்பாட்டு ஆய்வாளர் ரெங்கய்யா முருகன், நம்மிடம் பகிர்ந்து கொண்டது: 
தெரியாததை சொல்வது வேதம் என்பர். இடப தேவர் அருளியது; புறா வடிவம் கொண்ட கடவுள் உபதேசித்தது; இருடிகளால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற பல்வேறு கருத்துக்கள், வேதங்கள் பற்றி உலவு கின்றன. இருப்பினும், இருடிகள் தான், வேதங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தினர். 
ஆங்கிலேயர் வருகைக்கு பின், அச்சு ஊடகம் வளர்ச்சியடைந்தது. அது, கிறிஸ்தவத்தை பரப்ப உதவியதுடன், இந்திய வேதங்களை ஆங்கிலம் உள்ளிட்ட மேலை மொழிகளில் மொழிபெயர்க்க வைத்தது. 
வேதகிரி முதலியார், வேதக் கருத்துகளை தமிழில் கட்டுரைகளாக எழுதினார். 1898ல், சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு, தன் பத்திரிகையில், உபநிடதங்கள் குறித்த குறிப்புகளை வெளியிட்டார். பாரதியாரும், வேதக் கருத்துக்களை எள்ளி
நகையாடி உள்ளார். 
பத்தொன்பதாம் நுாற்றாண்டில், வியாசர்பாடி கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமி கள், சூளை ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள், பெரம்பூர் வீர சுப்பையா சுவாமிகள், வண்ணை நாராயணதேசிகர் உள்ளிட்ட வடசென்னை மடங்கள், பல்கலைக்கழகங்களைப் போல் செயல்பட்டு, பன்மொழி வேதாந்த கருத்துக்களை, தமிழில் வெளியிட்டன.
கசப்புணர்வு

குறிப்பாக, 'திருவொற்றியூரான் அடிமை' என அழைக்கப்பட்ட, த.ப.ராமசாமி பிள்ளையின் வேத மொழிபெயர்ப்பு பணி மிகச்சிறந்தது. அவர், சிறுவனாக இருந்தபோது, கரந்தையில் உள்ள கருவேலநாதர் சன்னிதியில் வேதம் கேட்க போய், அந்தணர்களால் திருப்பி அனுப்பப்பட்டார். அந்த நிகழ்வு, அவருக்குள் கசப்புணர்வாகவே இருந்தது
அவர், பொருளாதார ரீதியாக வளர்ந்ததும், தமிழில் வேதத்தை கேட்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில், காசிவாசி சிவானந்த யதீந்தர சுவாமிகள் கரப்பாத்திர சுவாமிகளின் அனந்த ஆசிரமத்திற்கு வந்தார். அதன் நிர்வாக பொருப்பாளரான முக்தானந்த சுவாமிகள், த.ப.ராமசாமி பிள்ளையிடம், சிவானந்த யதீந்தர சுவாமிகளை அறிமுகப்படுத்தி, 'நீங்கள் இருவரும் இணைந்தால், திருமகளின் கடாட்சமும், கலைமகளின் அருள்வாக்கும் தமிழுக்கு கிடைக்கும்' என, அறிவுறுத்தினார்.
அதனால், 1930களில், த.ப.ராமசாமி பிள்ளை பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, அனைத்து மொழிகளிலும் உள்ள வேதத்தின் உரைகள், வேதாங்கங்கள், நிருக்தம், நிகண்டு உள்ளிட்டவற்றை தருவித்து, காசிவாசி சிவானந்த யதீந்தர சுவாமிகளிடம் கொடுத்து, வேத மொழிபெயர்ப்பை துவங்கினார். 
மூன்றாண்டுகளுக்குள் சாம வேதத்தின் சம்கிஹிதா பாகத்தை, பதவுரை, கருத்துரை, குறிப்புரைகளுடன் மொழிபெயர்க்க வைத்தார். 
அவர்களுடன், அ.கோபால் மேனன், வடமொழி பதிப்பையும், டாக்டர் ராசாபகதுார் நாயகர், ஸ்டீவென்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு பிழைதிருத்தம் செய்ய உதவினர். பின், பாடியத்தை தழுவி நாகரம், கிரந்தம், தமிழ் என 3 வடிவங்களில், 2 தொகுதிகளை அச்சிட்டு உயர் ரக காலிக்கோ பைண்டிங் செய்து, ஆயிரம் பிரதிகள் பதிப்பித்து, தமிழர்களுக்கு இலவசமாக கொடுத்தார். 
த.ப.ராமசாமி பிள்ளை, தன் பதிப்புரையில், 'நாம் வேதத்தை, இன்னதென்று உணர முடியாமல் அறியாமையில் கட்டுண்டு கிடந்தோம். அதை உணர்ந்து, நமது திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானார், வேதங்களை தமிழிலும் எழுதுமாறு பணித்தருள, அப்பணியை தலைமேற்கொண்டு, செயற்கரிய செய்யும் பெரியாரை கொண்டு தமிழில் மொழிபெயர்த்து, முதலில் சாம வேதத்தை பதிப்பித்து உலகம் உய்யுமாறு நன்கொடையாக அளித்தனம்.
'இப்போது, கிருஷ்ணா எசுர் வேதத்தையும் மொழிபெயர்த்து நன்கொடையாக அளிக்கிறோம். மேலும் அதர்வண வேதம் முதலியவற்றையும் அளிக்க உள்ளோம். தானே வந்தது வீணே போனது என்றபடி, இதை வீணாக்காமல் அதன் பொருளுணர்ந்து உய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். 
நன்கொடையாக...
இந்த வேத மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்காக, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு மேற்கு மூலையில், பத்திரகிரியார், வள்ளலார், பட்டினத்தார் உள்ளிட்டோரின் சிலைகளுடன் கூடிய அழகிய கல்மண்டபம் எழுப்பி, அதற்கு கும்பாபிஷேகம் நடத்தி, இந்த நுாலினை நன்கொடையாக வெளியிட்டார்.
அவரை தொடர்ந்து, அதே காலகட்டங்களில் சிவத்தியானந்த மஹரிஷியும், மணக்கால் ஆர். ஜம்புநாத ஐயரும் சாம வேதங்களின் சில பகுதிகளை தமிழில் வெளியிட்டனர். என்றாலும், த.ப.ராமசாமி பிள்ளையின் மொழிபெயர்ப்புகளை, அரசோ, மடங்களோ, வேதாந்திகளோ மீண்டும் பதிப்பித்து மீட்டெடுக்காதது, தமிழின் சோக வரலாறாக உள்ளது.


  • நமது நிருபர் -

Retrieved with thanks from Dinamalar on July 22, 2016

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment