Wednesday, September 28, 2016

சிவகாமியின் செல்வன் 18

சிவகாமியின் செல்வன் 18

இன்னம்பூரான்
28 09 2016

காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவரும் முதலமைச்சராக இருந்தவரும், காமராஜருடன் பல விஷயங்களில் ஒத்துப்போகாதவரும் ஆன டி.பிரகாசம் அவர்களும் ஃபெப்ரவரி 13, 1946 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்குக் கொடுத்த பேட்டியில், ‘பார்லிமெண்ட் அரசியலுக்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது,எந்த ஒருவர் மீதும் தனக்கு ஆதரவு இல்லை என்று பலமுறை கூறி வந்த மஹாத்மா காந்தி, முறையாக நிறுவப்பட்ட தமிழ்நாட்டு காங்கிரஸை ‘clique’(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’ ~தமிழ் லெக்சிகன்) என்று வருணித்தது மாபெரும் தவறு என்றும், காந்திஜி இந்த தவறை நீக்கவேண்டும் என்று தான் கருதுவதாகவும், ஒரு அரசியல் கோட்பாட்டுக்காக சிறந்த முறையில் போராடிய காமராஜர் தமிழ் நாடு மாகாண பார்லிமெண்டரி போர்டிலிருந்து ராஜிநாமா செய்தது சரியே என்றும் கூறினார்.

அண்ணல் காந்தி அளந்து பேசுபவர். நேதாஜியை தோற்கடிக்க முயன்ற போது காந்திஜியே ஒரு ‘clique’ன்(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’ ~ லெக்சிகன்) சூத்ரதாரி என்பதும் உலகறிந்த விஷயம். அப்போதும் அளந்து பேசிய காந்திஜி, தான் பகர்ந்த 'க்ளிக்' என்ற சொல்லை வாபஸ் பெற முடியாது என்று விட்டார். காந்திஜி, ராஜாஜி, காமராஜர் ஆகியோர் மாசற்ற தேசபக்தர்கள் என்பதில் ஐயம் யாதும் இல்லை. ஆனாலும் தொடக்கத்திலிருந்து 2016 வரை உட்குழு மஹாத்மியம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி இயன்றது கிடையாது. சூரத் காங்கிரஸ்ஸில் செருப்புகள் பறந்ததை மஹாகவி பாரதியார் அருமையாக விவரித்திருக்கிறார். காங்கிரஸை நிறுவியது அலான் ஆக்டேவியன் ஹ்யூம் என்று ஹை ஆக்டேவில் வரலாறு படைத்தவர்கள், அதற்கு சென்னை பிரம்ம ஞான சபையில் சர். எஸ்.சுப்ரமணிய அய்யர் அவர்கள் வித்திட்ட பணியை கண்டுகொள்வதில்லை.

‘clique’(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’) சமாச்சாரம் இப்படி அவ்வபொழுது சூடு பிடிப்பது உண்டு. காமராஜர் தமிழ் நாடு மாகாண பார்லிமெண்டரி போர்டிலிருந்து ராஜிநாமா செய்தது பற்றிய தகவல்களில், முற்றிலும் பாரபக்ஷமில்லாதவையை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். இது இவ்வாறு இருக்க,1963லிருந்தே இறங்குமுகம் கண்ட காங்கிரஸ், 1967ல் காங்கிரஸ்ஸின் தூணாகிய காமராஜர் அவர்களே தேர்தலில் ஒரு மாணவனால் தோற்கடிக்கப்பட்ட அவலத்தையும் சந்தித்தது. அதற்கு பல காரணங்கள் சாங்கோபாங்கமாக கூறப்பட்டாலும் அது பற்றி காமராஜரும், ராஜாஜியும் கூறியவற்றை அடுத்த பதிவில் பார்த்த பின்னர் தான் ஓரளவு பின்னணி தெரிய வரும்.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி:
http://sd.keepcalm-o-matic.co.uk/i-w600/keep-calm-and-don-t-mess-with-my-clique.jpg
-#-
இன்னம்பூரான்

No comments:

Post a Comment