Saturday, March 12, 2016

இன்னம்பூரான் பக்கம் 5: 27 கனம் கோர்ட்டார் அவர்களே!பெண்ணே! சகல சம்பத்துக்களுடன் வாழ்க.

இன்னம்பூரான் பக்கம் 5: 27 னம் கோர்ட்டார் அவர்களே!

Saturday, March 12, 2016, 14:43

பிரசுரம்: வல்லமை:http://www.vallamai.com/?p=67049 


பெண்ணே! சகல சம்பத்துக்களுடன் வாழ்க.

இன்னம்பூரான்
10 03 2016
innam
‘இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே’ என்ற தலைப்பில் வல்லமை ஆசிரியர் எழுதிய
‘… சட்டங்களை முறியடிப்பவர்களுக்கும், சிக்கலில் இருப்பவர்களுக்கு மட்டுமே சட்டம் துணை வருகிறது என்கிறபோது, நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே. ‘
என்ற குறிப்பின் மீது,  நான் எழுதிய
‘நான் கவனித்த வரை, இந்துத்திருமணச்சட்டம் இவ்வாறு இயங்கவில்லை. சான்றுகள் கொடுத்தால், ஆய்வு செய்து பதில் தருகிறேன். இஸ்லாமில் தான் பெண்களுக்கு இன்னல்கள், ப்ராக்டிலாக பார்த்தால்.’
என்ற பின்னூட்டம், உணர்ச்சிவசமாக அவர் தொடங்கிய ‘மின் தமிழ், வல்லமை, தமிழ் வாசல்’ பதிவுகளில் காணக்கிடைக்கவில்லை. 1960 களில் நானும் வஸந்தாவும் மிகுந்த பொறுப்புடன் பங்கு கொண்ட ஒரு விவாகரத்து வழக்கில் பிறந்த பெண் குழந்தை தாயின் பராமரிப்பில் தான் வளரவேண்டும்; தகப்பனுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் விசிட்டிங் உரிமையும் மறுக்கப்பட்டது என்று தீர்வு வழங்கப்பட்டது. மெரிட் என்று ஒன்றை பார்க்கிறார்கள் அல்லவா.
திருமதி. ரேவதி நரசிம்மன் கொடுத்த அடி பலமானது.
‘மிக வருத்தம் தரும் செய்தி. ரத்து செய்ய பயந்து பொறுத்துப் போகும் பெண்களை அறிவேன்.‘
என்று அவர் சொல்வது தான் அந்த பலமான அடி. ஏனென்றால், அதில் உண்மை புதைந்து இருக்கிறது. ஆனாலும், சுட்டெரிக்கும் அந்த உண்மைக்கு இந்து திருமண சட்டமோ, நீதிமன்றத்துத் தீர்ப்புகளோ காரணம் அல்ல.
பவளசங்கரி கொடுத்த இணைப்பையும் அந்த தளத்தையும் முழுதும் படித்தேன். தகவல்கள் இருந்தாலும், பவளசங்கரியின் தொடருக்கு அது அணி சேர்க்கவில்லை. தற்பொழுது நடக்கும் உரையாடலை முழுதும் படிக்க வில்லை. இப்படியும் நடக்கத்தான் செய்கிறது என்ற இன்னல் சட்டத்தின் ஓட்டைகளால் இல்லை. இருந்தால் சொல்லுங்கள்.
நீதிபதி கஜேந்திரகட்கர் அவர்கள் மிகவும் போற்றப்பட்ட நீதிபதி. அவருடைய தீர்வுகளும், கருத்துக்களும் ஆழ்ந்து படிக்கவேண்டியவை. சட்டக்கமிஷனின் தலைவராக இருந்த அவர் மார்ச் 1974ல் Hindu Marriage Act,1955 And Special Marriage Act, 1954 பற்றி அளித்த 59 வது ரிப்போர்ட்டை கவனித்தால் நல்லது பயக்கும். எனினும், அவரவர் உரிமைக்கேற்ப பெரும்பாலோர் என்னுடைய இத்தகைய கட்டுரைகளை படிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். ஆனால், தெரிந்த நிதர்சனத்தை எடுத்துரைக்காமல் இருப்பதும் தவறு. எனவே, ஒரு அறிமுகத்துடன், இதை நிறுத்தி விடுகிறேன். தேவைக்கிணங்க, பிறகு பார்க்கலாம்.
அக்காலத்து அரசும் அந்த கமிஷனும் விவாகரத்து செய்வதை எளிதாக்கவேண்டும், இல்லறத்தில் முழுமை, மறுமணம் செய்து கொள்வதற்கு துணை போகவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இயங்கினார்கள். இதில் என்ன தப்பு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. கிரிமினல் கோட் ஷரத்து 488 படி ஜீவானம்சத்துக்கும் விவாகரத்து உரிமைக்கும், பெண்களுக்கு மட்டும் தான் கொடுத்தது. அதில் என்ன தவறு? அத்தகைய உரிமையை ஆணுக்கும் கொடுக்கலாமா? என்று அரசு வினா எழுப்பியது. அதில் என்ன தவறு?
The Hindu Marriage Act 1955ல் அமலுக்கு வந்தது. Hindu Succession Act, 1956, Guardianship Act, 1956 and the Hindu Adoptions and Maintenance Act, 1956 அடுத்து வந்தன. இவற்றின் பின்னணி:
“ …நமது சிந்தனைகளிலும் , அணுகுமுறையிலும் ஒரு புரட்சி வரவேண்டும். நமது தொன்மையிலிருந்து நாம் அணைந்த சாம்பலை உதறிவிட்டு, தீச்சுடர்களை எடுத்துக்கொள்ளவேண்டும். …
[தரும சாஸ்திரம் சொல்லும், தமிழ் இலக்கியம் கூறும் எட்டு வகை விவாகங்களையும், சங்க நூல்கள் பாராட்டிய தலைவன் – தலைவி கூடல்-ஊடல், பகற்குறி, இரவுக்குறி, அலர், உடன்போக்கு ஆகியவற்றில் எது தீச்சுடர்? எது அணைந்த சாம்பல் என்றொரு பட்டிமன்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறது!] … கடந்த காலத்தை நினைவில் வைப்போம்; நிகழ்காலத்தில் கவனம் வைப்போம்; மனதில் துணிவுடன், சுய நம்ப்பிக்கையுடன் வருங்காலத்தை படைப்போம்…” .
– ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்
மேற்படி சான்றுகளில் தவறு, பெண்ணுக்கு அநீதி இருந்தால், சொல்லுங்கள். இதை எதிர்த்தது பழமை, தர்ம சாத்திரங்கள், சாதீய பார்ப்பனர் போக்கு ஆகியவை. நாம் அவர்களுடன் கூட்டு சேரவேண்டுமா? சொத்து பெண்களுக்கு 1882 வரை இங்கிலாந்தில் கிடைக்கவில்லை. இந்திய சனாதன சாத்திரப்படி 12ம் நூற்றாண்டு காலகட்டத்தில், ஸ்த்ரீதனம் என்பதற்கு விக்னேஸ்வரர் என்ற வல்லுனர் இட்ட பட்டியல் கீழே:
தந்தை தந்தது;
தாய் தந்தது [மஞ்சக்காணி];
கணவன் கொடுத்தது;
உடன் பிறப்பு கொடுத்தது;
மாமன்மார் கொடுத்தது;
திருமணப்பரிசுகள்.;
வாரிசு சொத்து;
வாங்கிக்கொண்டது;
சொத்துப்பிரிவினை;
பிடுங்கிக்கொடுக்கப்படது.
[இவை எல்லாம் மனுவும், யாஞ்யவல்கரும் மற்றோரும் கூறியபடி பெண்ணை சார்ந்தது].
உண்மை சுடும் என்பதை சுட்டிக்காட்ட நீதிபதி கஜேந்திரகட்கர் சொன்னதை கேட்கவும்:
“ இந்துமதம் சார்ந்த இந்த நான்கு சட்டங்களும் புரட்சிகரமானவை. தனிப்பட்டவர்களை கண்காணிக்கும் சட்டம் சமுதாயத்தை காக்கவேண்டும், மதரீதியை கழிக்க வேண்டும் (மற்ற மதங்களை பேசலாகாது; மட்டுறுத்துவார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி; அவனொரு இந்து) என்ற முற்போக்குக் கருத்தை பார்லிமெண்ட் அமல் படுத்துவது, நமது அரசியல் சாஸனத்தின் 14வது ஷரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருகிறது.’
இது தவறா?
இத்தனை சொன்னபின்னும் என்னுடைய எதிர்ப்பை சொல்லவில்லை.
‘தனிப்பட்ட ஒவ்வோருவரின் குணாதிசயமும் ஏற்படுத்தும் இழப்புக்கு மதங்கள் ,பழைய முறைகள் என்ன செய்யும் என்று தமிழ்த்தேனீ வினவியுள்ளார். ரேவதியின் கவலையை முன்பே எடுத்துரைத்தேன். ஆம். பெண்கள் எதிர் நீச்சல் அடிக்கவேண்டிருக்கிறது என்ற பொத்தாம்பொதுவான கருத்தை மூடி மறைக்க முடியாது. அது நிஜம் தான். காரணத்தைச் சொன்னால் அடிப்பார்கள். சொல்லி விட்டு விடை பெறுகிறேன். சட்டம் அளித்ததை அவரவர் சமூகங்கள் தட்டிப்பறிக்கின்றன. அது தான் உண்மை. அதனால் தான் இப்படியும் நடக்கத்தான் செய்கிறது இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. 1974க்கு பிறகு பல முன்னேற்றங்கள், பின்னடைவுகள், பொய்யும் புளுகுகளும்.
நான் ஆக்கப்பூர்வமாக யாராவது கேட்டால் பதில் சொல்கிறேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/75/MarriageAndMorals.jpg/220px-MarriageAndMorals.jpg
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, March 7, 2016

இன்னம்பூரான் பக்கம்: III: 2 இந்திய தணிக்கைத்துறையும், நானும் [2]



இன்னம்பூரான் பக்கம்: III:1 

இந்திய தணிக்கைத்துறையும், நானும்[1]

Monday, March 7, 2016, 9:58

பிரசுரம்: http://www.vallamai.com/?p=66923

இன்னம்பூரான்

150 வருடங்களுக்கு மேலாக தனது பாரம்பரியத்தையும், சுயாதீனத்தையும், அடை காக்கும் பெட்டையை போல பொத்தி, பொத்தி பாதுகாக்கும் இந்திய தணிக்கைத்துறை, எனக்கு செவிலித்தாய். அதன் வெண்குடை எனக்கு நிழல் தந்த வேப்பமரம். உலகெங்கும், யதேச்சாதிகாரம் ஆளும் நாடுகளில் கூட தணிக்கை அறிக்கைகள் மீது தனி கவனம் உண்டு. அதை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள தாரதம்யம் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்தியா போன்ற குடியரசுகளில் கூட ஆளும் கட்சிகள், தணிக்கை நிரூபித்த குற்றச்சாட்டுகளை, உதாசீனம் செய்வதை நான் அறுபது ஆண்டுகளுக்கு மேல் கண்டு வருகிறேன். 

இதே வல்லமை இதழில் என் அனுபவங்களை ‘தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ என்ற தொடரிலும், 2ஜி ஆடிட் ரிப்போர்ட், பொய்யை மெய் என்று மொய் எழுதும் ரசவாதம், கான்ட்ராக்ட்களை அளிப்பதில் மோசடி, ஆகியவற்றை ‘தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை’ என்ற தொடரிலும் எழுதி வந்தேன். அவற்றின் பின்னணி, வாக்களிக்கும் குடிமக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது, தணிக்கைத்துறையின் பரிந்துரைகளை நன்கு அறிந்து செயல்படவேண்டும் என்ற ஆர்வம். வாசகர்கள் குறைய குறைய, அந்த ஆர்வம் மங்கியது. என்னை கைது செய்ய வந்த அனுபவத்தைக் கூட, அரைகுறையாக, நட்டாற்றில் விட்டு விட்டேன்.

விட்ட குறையை நிறைவு செய்ய நான் விரும்புவதற்கு மூன்று காரணங்கள் உளன.

~ தேர்தல் வருகிறது பல மாநிலங்களில். சிலர் இந்த தொடரால் பயன் பெறக்கூடும்.

~ நன்கு படித்து பல துறைகளில் திறனுடன் பணி புரிந்த நண்பர்கள் வினவும் வினாக்கள், தணிக்கைத்துறையின் சுயரூபத்தை, அவர்கள் காணவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகின்றன: அவற்றில் சில. 
ஏன் இந்த இந்த அட்டூழியத்தை ஆடிட் ஒழிக்க வில்லை?

ஆடிட் ரிப்போர்ட்டை ஏன் பொது மன்றத்தில் வைப்பதில்லை?

அரசு ஆணையிட்டால் ஆடிட் ஆடித்தானே ஆகவேண்டும்! [It is a myth. None can influence the Audit depot.]

எல்லாம் வேஸ்ட் ஸார்!!!

~ நான் எழுதும் தளங்களில் புதிய இளைய தலைமுறை வரவுகள்.

இன்றைய தணிக்கை பிரகடன ஆவணத்துடன், பிராரம்பம் தொடங்குகிறது.

*கர்நாடகா மாநிலத்து வரவு ஆவணங்களை ஆய்வு செய்ததின் வெளிப்பாடு:
அனுமதியில்லாமல் வெட்டி எடுத்து அனுப்பிவித்த தாதுப்பொருள் [மினரல்]: 79 லக்ஷம் டன்;
நஷ்டம்: 118.75 கோடி ரூபாய்;
17 சாவடிகளில் 4ல் மட்டும் கணினி;
52 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் வாங்க விட்டுப்போன வரி: ரூ. 309.81 கோடி;
ஆடிட் விரட்டி, விரட்டி கண்டு பிடித்த வரி ஏமாற்றல் அங்கே: ரூ.302.19 கோடி;
22,002 ஊர்திகள் வரி ஏமாற்றியதில் நஷ்டம்: ரூ. 45.31 கோடி.
13.71 லக்ஷம் வண்டிகளிடமிருந்து வாங்க விட்டுப்போன பசுமை வரி: 52 கோடி ரூபாய்க்கு மேல்.

நான் எடுத்துக்காட்டியவை ஒரு சிறு துளி. எல்லா செலவுகளையும் ஆடிட் செய்ய ஒரு பெரிய படையே வேண்டும். இவை செலெக்ட் டெஸ்ட் ஆடிட் மூலம் கிடைத்த அவலங்கள். ஆடிட் ரிப்போர்ட்டை முழுமையாக படிக்க விரும்பினால், அதையும் இணைக்க முடியும்.

சுருங்கச்சொல்லின், தணிக்கை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டாலே, ஊழல் மன்னர்கள் நடுங்கிச்சாவார்கள். பார்க்கலாம்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://euromaidanpress.com/wp-content/uploads/2014/11/auditor.jpg

ஆவணத்துக்கு நன்றி: ஹிந்து இதழ்: மார்ச் 5 , 2016.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


*




III:2 இன்னம்பூரான் பக்கம்: III:2 இந்திய தணிக்கைத்துறையும், நானும்

Friday, March 11, 2016, 4:50
பிரசுரம்: வல்லமை இதழ்: http://www.vallamai.com/?p=67015
கடையில் இருக்கும் நெய்யே…🛂 
இன்னம்பூரான்

மார்ச் 9, 2016

ஒருவர் சொத்தை மற்றொருவர் அபகரிப்பது தொன்று தொட்டு நடந்து வரும் பகற்கொள்ளை. சில சமயம் தீவட்டிக்கொள்ளை. சில சமயங்களில் கன்னம் வைப்பது. சில சமயம் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, பொய் கணக்கு எழுதுவது.
சாணக்கியர் உரைத்தப்படி, திருடர்கள் இருப்பதை இல்லை என்பார்கள். இல்லாததை இருக்கிறது நம் தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள். [அந்த இழை தனியே ஓடும்.] இதையெல்லாம் சாங்கோபாங்கமாக குடைந்தெடுத்து, தணிக்கைத்துறை பொதுமன்றத்தில் வைத்தாலும், கொள்ளையர் சண்டியர் மாதிரி வீதிவலம் வருகிறார்களே என்று மெத்தப்படித்தவர்கள் கூட அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். குடியரசு ஆட்சியில், அரசியல் சாஸனத்தின் ஆணைக்கு உட்பட்டு, ஆடிட் ரிப்போர்ட்கள் சட்டசபையில் வைக்கப்படுகின்றன. அந்த நிமிடமே பொதுமன்றத்தில் அவை பிரசன்னம். இனி, மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தான் செயல்படவேண்டும்.

இன்று எங்களுடைய மின் தமிழ் தளத்தில் முனைவர் சுபாஷிணி எழுதியது,

‘…அரசியல் என்று வரும் போது அரசியல்வாதி-பொதுமக்கள் என்ற இரு பகுதி இருக்கின்றது. அரசியல்வாதி தவறாகாச் செயல்படும் போது அதனை மாற்றி அமைக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கு உண்டு. அதிலும் அதிகமாக ஊடகங்களுக்கு உண்டு…
கனப்பொருத்தமாக அமைகிறது.

Do not bark at the wrong tree, please.

தணிக்கைத்துறையின் வரலாற்றுத் துளிகளும், சேகரத்துக்குகந்த பழைய நிகழ்வுகளும், என் அனுபவங்களும், தணிக்கை செய்முறை நுட்பங்களும், தற்காலிக சமாச்சாரங்களும், இழையில் ஊடாடி [seamlessly woven) வருபவையாகும். வாசகர்கள் ஊன்றி படித்தாலொழிய, ஆடிட் ஆவணங்களை புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும், அந்த துறை பொதுமக்கள் பார்வைக்காக, ஐம்பது வருடங்களாக எளிய நடை தமிழில் அவற்றின் சாராம்சத்தை பதிவு செய்கிறார்கள். விழிப்புணர்ச்சிக்கு அது தேவை. காலம் கெட்டுக்கிடக்கிறது. மத்திய அரசின் ஒற்றர் இலாகா கூட இன்று ஆர்வலர்-ஒற்றர் நாடி விளம்பரம் செய்து இருக்கிறது ! சிட்டிஸன் -ஆடிட்டரைத்தான் காணமுடியவில்லை!

மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் 1909 தான் முதல் முதலாக ஆடிட் பற்றி தெளிவான திட்டம் வகுத்தது. ஆடிட்டர்களுக்கு நிம்மதி வேண்டும்; சிந்திக்க அவகாசம் தேவை; அவர்களை மாஸ்டர்கள் தொணத்தக்கூடாது; அவர்கள் தன்னிச்சையாக செயல்பட வசதி அளிக்கவேண்டும்; இத்யாதி. அன்னியநாட்டை அடக்கி ஆளும் கலோனிய அரசு இத்தகைய சுவாதீனத்தைத் தணிக்கைத்துறைக்குக் கொடுத்தது போற்றத்தக்கது; வியப்பை அளிக்கிறது. இது ஒரு முகாந்திரம். ஒரு நிகழ்வு. அந்த துறையின் மூத்த இந்திய அதிகாரி ஒருவர் வைஸ்ராய் செய்த செலவுகளை கண்டித்தார். அது துரைத்தனத்தாருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அடுத்தபடி ஆடிட்டர் ஜெனெரலாக அப்போதைக்கு ஒருவரை நியமனம் செய்ய வேண்டி இருந்தது. அதே துரைத்தனத்தார், தன்னிச்சையாக செயல்படுபவர் என்று இவரையே அந்த பதவியில் அமர்த்தினர்.

நான் தணிக்கைத்துறையில் கால் வைத்தது 1954ல், குமாஸ்தாவாக. வேலை கனஜோர். மேலதிகாரிகளை இம்பெரஸ் பண்ணுவதற்காக, வந்த ஆவணங்களை மறைத்து வைத்து விட்டு, ‘ஏன் அனுப்பவில்லை?’ என்று கடுமையாக விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டிவிட்டு, அடுத்தமாதம் ஆவணங்களை வெளி கொணர்ந்து செட்டில் செய்து, மார் தட்டிக்கொள்வதும் உண்டு! வபையாக மாட்டிக்கொண்டவனை திண்டாட வைத்ததும் உண்டு. இதை சொல்வதின் காரணம்: [1] ஆடிட்காரனும் பாமர மனிதனே; சில்லரை விஷமம் அங்கேயும் உண்டு. [2] அடுத்த வருடமே பெரிய பதவி ஏற்ற நான் பாவ்லா செய்பவர்களை பிடிக்க முடிந்தது என்பதே.
இன்றைய சங்கதிக்குக் கோடி காட்டி விட்டு போகிறேன். ஏற்கனவே, நீண்டு விட்டது.

அவுட்! 12,400 கோடி ரூபாய் அபேஸ்! ஆடிட்டர் ஜெனரல் துல்லியமாக தனியார் துறை கணக்குப்புத்தகங்களை அலசி, வடிகட்டி எடுத்த குற்றச்சாட்டு. நமது நண்பர்கள் முதலாளித்துவத்தை போன்ற உயரிய பொருளியல் தத்துவம் கிடையாது; போட்டி இருப்பதால் சந்தை விலையை குறைக்கும் என்பார்கள். சந்தையெல்லாம் மொந்தைக்கள் தான். மற்றும் சிலர் அயல் நாட்டுச்சரக்கை வரவேற்க வேண்டும் என்று ரத்னகம்பளம் விரிப்பார்கள்.

நடந்தது என்ன?

ரிலையன்ஸ், டாட்டா, ஏர்டெல்,வோடோஃபோன், ஐடியாஸ். ஏர்செல் ஆகிய தனியார் துறை மகானுபாவர்கள் 2006 -2010 காலகட்டத்தில் பொய்க்கணக்கு காட்டி, அரசை ஏமாற்றிய செல்வம்: 12,400 கோடி ரூபாய். ஆதாரம், அவர்கள் காட்ட மறுத்து பல கோர்ட்டுகளை அணுகி, கெஞ்சி,வாய்தா கேட்டு, கேட்டு, எல்லாவிதமான தகடுத்தத்தங்கள் ஃபெயில் ஆனபின், 2014ல் தான் உச்ச நீதி மன்ற தீர்வுக்கு பிறகு, அரைமனதுடன் காண்பித்த கணக்குப்புத்தகங்கள் அளித்த வாக்குமூலம், இது.
சாமான்யமாக ஆடிட் செய்ய முடியவில்லை. 

‘கல்லைக்கண்டா நாயை காணோம்; நாயை கண்டா கல்லைக்கானோம்.’ 

என்ற அலங்கோலம் தான். ஆனாலும், இந்த தணிக்கைத்துறைக்கு பொறுமை ஜாஸ்தி. வணங்கா முடி வேறே.
கொசுறு: இந்த ஊடகக்காரர்கள் [மீடியா] அந்த தனியார் நிறுவனங்களை அணுகி, ‘என்னப்பா சமாச்சாரம்? ஆடிட்காரன் அடி அடியா அடிக்கிறானே. நிசமா? ‘ என்று கேட்டார்கள். ஒரே மூச்சாக எல்லாரும் பதிலளிக்க மறுத்து விட்டார்கள்.
ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா: மார்ச் 9ம் 2016,
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.starlightinvestigations.co.uk/wp-content/uploads/2015/01/Investigation-1038×576.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

வாழும் கலை : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் – நூல் மதிப்புரை

வாழும் கலை : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் – நூல் மதிப்புரை

பிரசுரம் வல்லமை: http://www.vallamai.com/?p=66884

– இன்னம்பூரான்.

வாழும் கலை: மரணமில்லாத ஜே.கே. தத்துவங்கள்

பி.எஸ்.ஆர். ராவ். (2007/2013) சென்னை; நர்மதா பதிப்பகம்
புத்தக விமர்சனம்: இன்னம்பூரான்
கைரேகைகளைப் போல அவரவரது வாழ்க்கையின் நடை, தனது அழியா வரிகளைப் பதித்து விடுகிறது. நாம் எஞ்சிய வாழ்க்கையின் போது அவற்றை அழிக்கமுடியாது என்றாலும், வருகை புரியும் ரேகைகளின் ஆளுமை பிற்கால வாழ்வியலை நிர்ணயிக்கும். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ( ஜே.கே. ) மே 11, 1895 அன்று மதனப்பள்ளியில் ஜனித்தார். ஆசாரசீலர்களான ஒரு வளநாடு தெலுங்கு பிராமணக்குடும்பம் என்று பி.எஸ். ஆர். ஆர். குறிப்பிட்டதில் ஒரு நுட்பம் காண்கிறேன். ‘எங்கிருந்தோ வந்தான்…’ என்ற பாரதி வாக்குப்படி, மதனப்பள்ளி கட்டுப்பெட்டிக் குடும்பத்து பையன், தந்தையின் அலுவல் பொருட்டு சென்னையில் வந்திருந்து, பிரம்மஞ்ஞான சபையில் [The Theosophical Society, of which I became a member,decades later.] ‘முத்துக்குளித்து’ அன்னி பெசண்ட் அம்மையாரால் கடவுளின் அவதாரம் என்று பிரகடனம் செய்யப்பட்டவனானான். சர்ச்சைகள் கிளம்பி அடங்கின. தனது அபிமான புத்திரனாக, இவரை அம்மையார் அறிவித்தவுடன், ஜே.கே உலகுக்கே குரு என்ற கருத்து, பிரம்மஞ்ஞான சபையின் தாரக மந்திரம் ஆயிற்று. மனிதர்களில் அவரொரு மாணிக்கம் (ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்) என்று தான் அன்னி பெசண்ட் கூறி வந்தார். அந்தக் கருத்து நடைமுறைக்கு வந்திருந்தால், அவர் மிகவும் போற்றப்பட்டிருப்பார்; வணங்கப் பட்டிருப்பார்; மடாதிபதியாக மேலாண்மை பெற்றிருக்கலாம். ஒன்று நிச்சயம். இன்றளவில் சுவடு ஒன்றும் இல்லாமல் முழுமையாக மறக்கப்பட்டிருப்பார்.
ஹாலந்தை சேர்ந்த ஓமன் நகரில் ஆகஸ்ட் 3, 1929 அன்று அந்தக்கூட்டத்தின் நக்ஷத்ர ஸ்தாபனத்தின் தலைவர் என்ற தகுதியின் படி தலைமை உரை ஆற்றிய ஜே.கே. அந்த ஸ்தாபனத்தைக் கலைத்து விட்டார். பிரம்மஞான சபையிலிருந்தும் விலகி விட்டார்.
அந்தணக்குல ஜனனம் ஜனன ரேகை; 
பிரம்மஞான சபை பருவ ரேகை; 
அவதார பிரகடனம் அபிமான ரேகை; 
தன்னை தனித்து அமைத்துக்கொண்டது ஆத்மரேகை.
[“கற்பனையும் ஊக்கமும் தொடமுடியாத பிரதேசத்தில் பயணம் செய்யத் தியானம் உதவுகிறது.” ~ ஜே.கே.]
அது தான் நிர்ணயரேகையாக அமைந்தது, இன்றளவும் நம்மை சுய விசாரணை செய்ய உந்துகிறது.
முன்னும் பின்னும் தெரியாதவற்றை விமர்சனம் செய்ய திறந்த மனதின் விகாசம் பெரிதும் உதவும். அண்டை வீட்டு பி.எஸ். ஆர். ராவ் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஜே.கே.யின் சிந்தனையின் தூய பிரதிபலிப்பு. ஒரு வருடத்துக்கு மேல் எனக்கு நெருங்கிய நண்பர். கருத்து வேறுபாடு அபரிமிதம் என்றாலும் சிந்தனை பரிமாற்றங்கள் எம் இருவரின் வாழும் கலைக்கு அர்ப்பணம். அதனால் இந்தப் புத்தக விமர்சனம் எனக்கு மெத்தக் கடினமாயிற்று. அதனுள் ஒரு நுட்பம். அது யாதெனில், திறந்த மனதின் விகாசத்தை நான் தேடி அலையும் போது, ஜே.கே. அவர்கள் கூறுவதை உன்னித்துக் கேட்கமுடிகிறது. முன்னும் பின்னும் தெரியாதவை கட்டியம் கூறுகின்றன. பீடிகை முற்றிற்று.
“இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவ ஞானம்.”
“தன்னை அறிந்து இன்பமுற விழைவோருக்கு ஒரு பரிசுப்பதிப்பு.”
என்ற சொற்றொடர்கள் நூலின் முகப்பை அலங்கரிக்கின்றன. இவை என்னை மிகவும் அலைக்கழித்த வரிகள். சுவாமி விவேகானந்தர், Bertrand Russell, Aldous Huxley, Jean Paul Sartre, Søren Aabye Kierkegaard போன்ற சிந்தனையாளர்கள் சிறு வயதிலேயே என் மனதை ஆக்கிரமித்தவர்கள். அந்தக் காலகட்டத்தில் ஜே.கே. அவர்களை அறிய நேர்ந்ததே நல்லதொரு வாய்ப்பு. சிலந்தி வலை போல் உமிழ்ந்து பின்னப்பட்ட என் சிந்தனை வலை, தட்டி உதற வேண்டிய ஒட்டடையாகப் போகாமல் இருப்பதற்கு, அந்த அறிமுகம் பெரிதும் உதவியது. இல்லாவிடின், இந்த விமர்சனம் எழுதுவது சாத்தியமில்லை.
மானிடராகப் பிறப்பு எய்தியவர்கள் அன்றாடம் சந்திக்கும் கருத்துலகம்
~ உண்மை, ஒழுங்கு, அன்பு, எளிமை, சுதந்திரம் என்ற வரிசையில் தொடங்கி,
~ அறிந்து கொள்வது, ஆழ்ந்து கேட்பது, தனித்துச் செயல்படுவது போன்ற செயல்பாடுகளை விவரித்து,
~ அகம்பாவம், முரண்பாடுகள், இம்சை, பயம், பிரச்சினை, யுத்தம் போன்ற தீய தன்மைகளையும்,
~ கட்டுப்படுத்தும் அதிகாரம், ஜீவிதம், கல்வி, உளவியல் புரட்சி, மனித உறவுகள் போன்ற அன்றாட நடைமுறைகளையும்,
~ பிம்பங்கள், எண்ணங்கள், கல்வி, சமயம் போன்ற தலைப்புகள் மூலம் வாழ்வியல் தத்துவங்களையும்,
இந்த நூலின் 41 பகுதிகள் எடுத்துரைக்கும். அவற்றின் அமரிக்கையான தன்மையும், அடுக்கி வைத்த வரிசையும், கலையார்வத்துடன் நன்முத்துக்களைப் பதித்த ஆபரணங்களைப் போன்ற சொல்லலங்காரமும் போற்றத்தக்கவைதான். இந்த ஆபரணத்தோற்றம், திரு. பி.எஸ்.ஆர். ராவ் அவர்களுக்குத் தென்பட்டிருக்காது. தள்ளி நின்று விமர்சனம் செய்பவர் கண்ணில்தான் படும்.
நூலாசிரியர் தன் முன்னுரையில்,
“ஜே.கே.யின் நூல்களையும் சொற்பொழிவுகளையும் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நிறைய பேர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அவருடைய சிந்தனைகளை சாதாரண படிப்பு படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி, நடைமுறையில் இருந்து வரும் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதியிருக்கிறேன். இது மொழி பெயர்ப்பு அல்ல. இந்த நூலைப் படிப்பவர்கள் சிறந்த மனிதர்களாக உருவெடுப்பார்கள்.”
என்றது நிதர்சனமாகத் தெரிகிறது.
“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்”.
“நாம் தேர்ந்து எடுக்கும் ஜீவிதம் உன்னதமான, விசாலமான, பயனுள்ள, சிறந்த குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்… உலக அமைதியை நிலை நாட்டுவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். அராஜகம், கலவரம், யுத்தம் போன்றவற்றை உருவாக்காதபடி நம் ஜீவிதம் அமைய வேண்டும்… வானம், காற்று, நீர், மலை, கடல், மிருகங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், செடி, கொடிகள் போன்ற அனைத்துடனும் நாம் நல்ல ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்…. இன்று மனிதன் வாழும் ஜீவிதம் வேதனை நிறைந்ததாகவும், சுவையற்றதாகவும், சலிப்பு நிறைந்ததாகவும் இருந்து வருகிறது…. மகிழ்ச்சியும் இன்பமும் தரும் ஜீவிதத்தை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்….. மதம், கடவுள்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவை சம்பந்தப்பட்ட ஜீவிதங்கள் நல்ல ஜீவிதங்களாக இருக்க முடியாது. அவை அனைத்தும் மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து… மனித வாழ்க்கையை வேதனை நிறைந்ததாக மாற்றி வருகின்றன….. ஜே.கே. சொன்ன உளவியல் வழிமுறைகளைப் பின்பற்றுவதின் மூலம்தான் உலகில் இருந்து வரும் கெட்டவை அனைத்தையும் அகற்ற முடியும்… உங்களுடைய எதிர்பார்ப்புகளைப் பொறுத்துத்தான் உங்கள் ஜீவிதங்கள் அமையும்… நன்கு பராமரிக்கப்பட்ட பழச்செடி நிறைய ருசியான பழங்களைத் தருவது போன்று நன்கு பராமரிக்கப்பட்ட ஜீவிதமும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைத் தரும்.” 
[நூல்: பக்கங்கள்: 194 -210].
ஆசிரியர் எளிய முறையில் எழுதியதை, இந்த 33வது உட்பொதிவு ஆன ஜீவிதத்தின் சாராம்சம் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு உட்பொதிவும் அவ்வாறே அமைந்து, ஜே.கே.யின் தத்துவத் திறவுகோலாக இயங்குகின்றன.
தியானம் என்ற 39வது உட்பொதிவு ஒரு அமைதியான புரட்சி.
“கற்பனையும் ஊக்கமும் தொடமுடியாத பிரதேசத்தில் பயணம் செய்ய தியானம் உதவுகிறது… தியானத்திற்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. அது அவன் முழு வாழ்க்கையைத் தழுவியதாக இருக்கவேண்டும்… தியானம் என்பது முழுமையான கவனம்தான்… எண்ணங்களை ஒருமுகப்படுத்துவது தியானம் அல்ல… ஏகாந்தமான நிலையில் மௌனம் என்ற அழகான மலர் வளரும். அன்பு ஆறாக உருவெடுத்து ஓடும். அப்போது மனவருத்தங்கள் முரண்பாடுகள் போன்ற எதுவும் இருக்காது.” 
[நூல்: பக்கங்கள் 286 -311]
ஜே.கே.யின் சிந்தனைகள், கேள்வி-பதில் என்ற உட்பொதிவுகள் இந்த நூலுக்கு ஒரு முழுமையை அளிக்கின்றன. They are remarkable exercises in filling up the blanks. ஜே.கே. தன்னுடைய சிந்தனைகளுக்கு ஏகபோகம் கொண்டாடியதும் இல்லை. அவற்றிற்கு ஈடு, இணையில்லை என்று சொந்தம் கொண்டாடியதும் இல்லை. அவர் ஒரு சிந்தனை மார்க்கம் வகுத்தார். பயணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை. அது போதும்.
இலக்கிய / தத்துவ / சிந்தனை உலகில், புத்தக விமரிசனங்கள் நீண்டதாகவே அமையும். நூலின் உள்ளடக்கத்தைக் கூறுவதும், ஆசிரியரின் அணுகு முறையை அலசுவதுதான் முதலிடம் பெறும். விமர்சகரின் கருத்துக்கள் எல்லாம் இடம் பெறுவதில்லை… ஜே.கே.’எந்த நூலையும் யாருடைய வார்த்தையையும் மேற்கோள் காட்டாமல் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் (அல்லது பொருளின்மை) பற்றியும் பேசியவர்’ என்று தி இந்து இதழில் ஐந்து வருடங்கள் முன்னால் திரு. அரவிந்தன் எழுதியதும், ஜே.கே. நம்மையே நம் வினாக்களுக்கு விடை அளிக்க வைக்கும் அனுபவமும் நினைவில் இருப்பதால், நான் ஒப்பீடு ஆய்வுகளில் இறங்கவில்லை.
சிந்தனைகள் பயணிக்கும் விதம் பற்றி சில வரிகள். வல்லமை இதழின் பன்முகம் அறிவோம். நூல்களை மதிப்பீடு செய்வது பற்றி ஒரு கருத்து பரிமாற்றம். இந்த நூலை மதிப்பீடு செய்ய சொல்லி ஒரு பரிந்துரை. அது நிறைவேற்றப்படுகிறது. வல்லமை இதழுக்கும், பரிந்துரை செய்த நண்பர்கள் அண்ணா கண்ணனுக்கும், தேமொழிக்கும், நூலாசிரியர் திரு. பி.எஸ்.ஆர். ராவ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://img1.dinamalar.com/admin/Bookimages/5915156.jpg
இன்னம்பூரான்
மார்ச் 6, 2016