Friday, April 1, 2016

'உம்'

'உம்'

ராமுவும் சோமுவும் பள்ளித்தோழர்கள். கணினி மன்றத்திலும் தான். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு
விண்ணப்பித்தார். ஒரே பரிக்ஷை. அதே கேள்விகள். பால்யபருவத்திலிருந்து ஒரே மார்க் வாங்கி கின்னஸ் ரிக்கார்ட்
படைத்த இந்த இளஞர்கள் இங்கும் அப்டியே. வியப்பில் ஆழ்ந்த அதிகாரி, இரண்டு பேருக்கு இடம் காலியில்லை. ஒரு பத்து வினாத்தொடர். பத்து நிமிடங்களில் பதில் என்று பந்தயம் வைத்தார். ஒரே மார்க். சோமுவுக்குத்தான் வேலை கொடுத்தார். ராமு கொஷ்யண்ட். நியாயமான பதில் அளித்தார். அது என்ன, நண்பர்களே?

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


-----------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 2, 2016

தொல்காப்பியம் கற்றுக்கொள்ள:

1. விடையில்லையெனினும் தேர்வு. ஐந்தாவது வினாவுக்கு, 'எனக்கு தெரியாது' என்று சோமுவும், 'எனக்கும் தெரியாது' என்று ராமுவும் எழுத, ராமுவுக்கு வேலை கிடைக்கவில்லை.
2. எதிர்பாராத டெவலப்மெண்ட்: தொல்காப்பியம் கற்று, மறக்காமல் இருக்கப்பாடம்;

எச்சம், சிறப்பே, ஐயம், எதிர்மறை
முற்றே, எண்ணே, தெரிநிலை, ஆக்கம் என்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே
நூல்: தொல்காப்பியம் (சொல்லதிகாரம், இடையியல்)
பாடியவர்: தொல்காப்பியர்
’உம்’ என்ற சொல் எட்டு விதமாகப் பயன்படுகிறது:
1. எச்சம் : மீதமிருப்பதைச் சொல்லும்போது
உதாரணம் : அங்கே மிருகங்களோடு பறவைகளும் தங்கியிருந்தன
2. சிறப்பு : ஒரு விஷயத்தைச் சிறப்பித்துச் சொல்லும்போது
உதாரணம் : கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்
3. ஐயம் : இதுவா அதுவா என்று நிச்சயமில்லாமல் சந்தேகத்துடன் ஒருவரைப்பற்றிச் சொல்லும்போது
உதாரணம் : இவரும் நன்றாகவே பாடுவார் என்று நினைக்கிறேன்
4. எதிர்மறை : ஒன்றைச் சொல்லி அதற்கு எதிர்மறையான இன்னொன்றைப் புரியவைக்கும்போது
உதாரணம் : இவன் அவ்வப்போது படிப்பதும் உண்டு (அப்படியானால், பல நேரங்கள் படிக்காமல் இருப்பதுதான் வழக்கம் என்று அர்த்தம்)
5. முற்று : முழுமையைச் சொல்லும்போது
உதாரணம்: பதினெட்டுப் பட்டிக்கும் இவர்தான் நாட்டாமை
6. எண் : எண்ணிக்கையைச் சொல்லும்போது
உதாரணம்: தமிழிலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் இவர் சரளமாகப் பேசுவார்
7. தெரிநிலை : ஆராய்ந்து சொல்லும்போது
உதாரணம்: இது பாம்பாகவும் இருக்கலாம், வெறும் கயிறாகவும் இருக்கலாம்
8. ஆக்கம் : ஒன்றின் விளைவாக இன்னொன்று ஏற்படும்போது / ஆக்கப்படும்போது
உதாரணம்: நான் பாடும் பாடல் நன்றாக உள்ளதா?
உபயம்: என்.சொக்கன்
ராமுவின் 'உம்' இந்த எட்டில் எது?
இன்னம்பூரான்

மோடி, தாடி



ஆஹான்னானாம்! இப்போ தான் ஒபாமோவுடன் செல்ஃபிண்ட நமது மதிப்புக்குரிய பிரதமர் மோடியின் தாடியை கண்டு பரவசமடைந்தேன்.
ஓஹோன்னானாம்! என்னே களை! கொண்டேன் தாடி மோஹம்! முடியழகும் ஜோர், ஆலின் ஆல் அழகு ராஜா எம்.கே.டி. போல.
நிஜம்மா சொல்றேன். இத்தனை பேர் இருக்கங்களே. அவருடைய தாடி அட்வைஸர் யாரு?
மோடிக்கும் அவருடைய ஜோடி தாடிக்கும் என் கனிவு வாழ்த்துக்கள்.

Image Credit & Copyright & Thanks: http://images.indianexpress.com/2016/04/44cdf76ea989ce10940f6a7067009b0d-1mn.jpg?w=600



இன்னம்பூரான்

Thursday, March 31, 2016

இன்னம்பூரான் பக்கம்: 🌚💥🌚 🌚இன்றொரு நாள்: 1: போஸ்ட் ஆடிட்.


இன்னம்பூரான் பக்கம்: 🌚💥🌚
🌚இன்றொரு நாள்: 1: போஸ்ட் ஆடிட்.

நடு நிசி. அமாவாசை இருட்டு. லேசான தூறல். ஆனால், கீத்து மின்னல் டால் அடிக்கிறது. இடி டமாரம் அடிக்குது. தொலைவிலிருந்து ஆந்தையின் அலறல் என் கூடாராத்தின் நூல் ஜன்னலை தாக்குகிறது. ஒரு காட்டுப்பூனை மிரட்டு மியாவுடன் என் மார்பை மிதித்துவிட்டு, அந்த ஜன்னல் வழியாக ஓடி விடுகிறது. எங்கிருந்தோ வந்த ஒரு புலியின் உறுமல் கேட்டு, என் இரத்த அழுத்தம் உச்சகட்டத்தில் தாண்டவம் ஆடியது. இத்தனைக்கும், கட்டாயத்தின் மீது நான் இந்த கானகத்தில் நுழையவில்லை. தன்னிச்சையாப் போனேனா, பச்சை பச்சையா வாந்தி. பக்கத்தில் சிகெரட் பிடித்துக் கொண்டு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ஃபாரஸ்ட் ரேஞ்சர் பொம்மி ரெட்டிகாரு, சிரித்துக்கொண்டே ஒரு சிகெரட்டை நீட்டினார். ‘நீரு பீடி உறிஞ்சினா சரிக ஆயுடும்’ என்று சொன்னார். அவரை சுட்டுக்கொல்லலாம் போல நம்கு ஃபீலிங். ஆனால் துப்பாக்கி அவர் கிட்டெல்ல இருக்கு. போதாக்குறைக்கு, ‘ஏன் நடுங்கி சாகிறீர்கள்? செம்மரக்கட்டைக்காட்டிலே, நாகேஸ்வர ராவ் பார்க் மாதிரியா இருக்கும்? கொலையாளிகள் நடமாடும் பிராந்தியம் ஐயா! நீ இன்னா நனச்சுக்குணு வந்தீக என்று சென்னை கொச்சையையும், மலையாளி கொச்சையையும் கலந்து அடிச்சு விட்டார். அவர் சென்னையில் ட்ரெய்னிங் வந்திருந்தாராம். களக்காடு காட்டிலேயும்  வால்பாறையிலும் ப்ராக்டிக்கலாம். யாரு கேட்டா இதெல்லாம்? 

சமாச்சாரம் இது தான். ஓய்வு பெற்ற உயரதிகாரிகளுக்கு அப்பப்பொ தாக்கீது வரும். தணிக்கைத்துறையின் தணியா வேகம் தொடரில் நான் எழுதிய ரசவாதம் என்றை கட்டுரையை சீஃப் செக்ரட்ரீ சுதாகரன் ஐ ஏ எஸ் சந்திரபாபு ரெட்டிகாருவிடம் காண்பித்தாராம். தமிழ்நாட்டு பசங்க வந்து ரெட் சாண்டர்ஸ் வெட்டிக்கிணு போராங்க. அந்த கவர்னமெண்டோ கூவுது. நீரு இந்த இன்னம்பூரானை இங்கு கைபற்றப்பட்ட ரெட் சாண்டர்ஸ் துண்டங்களை ஏலம் போடச்சே, ஸ்பாட் விஜிலன்ஸ் ஆபீஸராக போடலாமே. அப்றம் ஆடிட்காரன் தொந்தரவு இருக்காதுல்லெ.  அவருக்கு ஒரு திருப்பதி ஏகாந்த சேவை, ஏழு லட்டு, ஒரு சால்வை, இரண்டு லக்ஷ ரூபாய் கேஷ்,  மெல்லிசா ஒரு தங்க மோதிரம் கொடுக்கலாம். முன்னாலேயே சொல்லிடுங்க. அந்த ஆளு ரொம்ப கறாரு என்று கியாதி என்றாராம். லட்டு தின்ன கசுக்குமா என்ன? சரி என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் பாருங்கோ, ‘விநாச காலே, விபரீத புத்தி’ என்பார்கள். ‘சுதாகர்! உனக்கு என்னை பற்றி நன்றாகவேத் தெரியும். காட்லெ போய் இந்த வெட்ற சங்கதியெல்லாம் பார்த்தால் தான், என்னால் வேலையை எடுத்துக்கொள்வதை பற்றி முடிவு கூறமுடியும்.’ என்று திட்டவட்டமாக சொல்லி விட்டு, அவர் வரச்சேயே மணி ஏழு. சோத்தைக் கொட்டிக்கிட்டே பேசினோமா!, காண்ட்ராக்ட் பேசி முடிக்க சீ.எம். கிட்டப்போய் கேளு’ என்று அசால்ட்டா சொல்லி விட்டு தலையை சாச்சேன், பதினொன்று மணி வாக்கில். துர்சொப்பனம் ஒன்று கண்டேன். ‘போகாதே! போகாதே! என் கணவா!’ என்ற நல்ல தங்காள் பாட்டின் மெட்டில்,

‘போகாதே ! போகாதே! இன்னம்பூரா!
சாகாதே! சாகாதே! சித்தூர் காட்டில்.
ஆகாது! ஆகாது! இந்த கூலி படையெடுப்பு!
சாகரத்தில் தள்ளப்படுவாய், அசட்டு கிழமே!

இப்டி ஒரு பாட்டை பாடிக்கொண்டு வந்தது, பள்ளிக்கரணை கொள்ளிவாய் பிசாசு!
நான் ஓவென்று அலறி மணியை பாக்றேன்.
மணி: 0.001 ஏ.எம் ஏப்ரல் 1, 2016.
இன்னம்பூரான்


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, March 27, 2016

இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3‘சாதிப்பெயர்…’


இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3
  1. Monday, March 28, 2016, 5:30
  1. Featuredஇலக்கியம் 3. பிரசுரம் http://www.vallamai.com/?p=67489
‘சாதிப்பெயர்…’
இன்னம்பூரான்
25 03 2016

சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பதையும், அதை எடுத்துரைப்பதையும், அவ்வாறு எழுத்துப்பழகுவதையும் பண்பற்றதாகவும், அநாகரீகமாகவும் கருதும் காலகட்டமிது. அந்த கருத்து தமிழ்நாட்டில் அதிகமாக உலவதும் கண்கூடு. பந்துலுவும், ரெட்டியும், நாயுடுவும் ஆந்திராவில் சகஜமாக நடமாடுகிறார்கள். அண்டை கேரளாவில், மேனனும், நாயரும், பணிக்கரும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஏன்? நம்பூதிரிபாட் முதல்வராக இருந்தாரே? சாதிப்பெயரை விலக்காத கம்யூனிஸ்ட்! கன்னடதேசத்திலோ, ராவுஜியும், அய்யாவும், வடநாட்டிலோ சதுர்வேதியும் , திரிவேதியும், த்விவேதியும், சக்சேனாவும், மோடியும், காந்தியும் படேலும், அரோராவுமாக பற்பல ‘சாதியை சுட்டும்’ துணைப்பெயர்களில்லா ஆளில்லை, நேரு உட்பட. இஸ்லாமியர் என்றால், தமிழ்நாட்டில் இல்லாத ராவுத்தர், மரைக்காயர், லப்பைகளா?

இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் ஆங்கிலேய கலோனிய ஆட்சியை எதிர்த்துப்போராடிய காலகட்டத்தில், தமிழ் நாட்டில் ‘முதலியார்’ நாயக்கர்’ ‘நாயுடு’ என்ற சாதிப்பெயர்கள் மரியாதையுடன் எடுத்துரைக்கப்பட்டன. அவர்கள் திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும், வரதராஜுலு நாயுடுவும் ஆவார்கள். திரு.வி.க. அவர்கள் தன் பெயரை ‘கல்யாண சுந்தரம்’ என்று எழுதினாலும், வீட்டில் அவர் ‘சின்ன முதலியார்’ தான்; மூத்தவரான திரு.வி.க. அவர்கள் தான் பெரிய முதலியார். என் தந்தையும், நண்பர்களும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.

‘உ.வே.சா அவர்கள் தன் ஆசிரியரிடம் வைத்திருந்த பக்திக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. பிள்ளையவர்கள் என்று சொல்வார்களே அன்றி முழுப்பெயரைச் சொல்லக்கூடப் பயப்படுவார்.’
இதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சகஜ நிலையில் போக்குவரத்து இருந்து வந்தது. ‘நான் ஒரு சூத்திரன்’ என்று எழுதியவர் தன்னை சட்டநாத கரையாளர் என்று தான் அறிவித்துக்கொண்டார். நீதிக்கட்சித்தலைவர்கள் சாதிப்பெயரை அழித்துக்கொள்ளவில்லை – டி.எம்.நாயர், தியாகராஜச் செட்டி.
திராவிட கட்சிகள் தலையெடுத்து ஆட்சிக்கு வந்த பின் ஐயங்கார் தெரு ‘தெரு’ ஆனது; சோமசுந்தர முதலியார் தெரு ‘சோமசுந்தரம் தெரு’ ஆனது; இது எல்லாம், ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ரெட் ஹெர்ரிங். தமிழில் பாசாங்கு. திசையை இப்படியெல்லாம் திருப்பி, இன்று வரை சாதி அடிப்படையில் மட்டுமே தேர்தலுக்கு ஆள் பிடிக்கிறார்கள், அந்த திராவிடக்கட்சிகள். இதெற்கெல்லாம் கேள்வி முறை கிடையாதா? எத்தனை வருடங்கள் நாம் ஏமாந்த சோணகிரியாக இருப்போம்?

நிகழ்காலத்துக்கு வருவோம்.
  • சங்கர்-கெளசல்யா ஜோடியை கலைக்க இருவரையும் பயங்கரமாகத் தாக்கி, சங்கரை கொன்ற மேல்சாதி கண்டது என்ன? – சிறை சென்றதும், பெற்ற பெண்ணை அனாதையாக்கியதும், தன் குடும்பத்தின் மேல் சேற்றை வாரி போட்டுக்கொண்டது தான்

– இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அப்பனின் ஆத்திரம் மட்டும் தானா?

  • ‘வெட்டி சாய்க்கிறார்கள்…சுற்றி நின்றவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். பதறி விலகுகிறார்கள்‘

-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? இல்லை தமிழர்களின் பாழாய்ப்போன பயந்தாங்குளி குணமா?
கெளசல்யாவின் அப்பனும், மாமனும் மிரட்டியிருக்கிறார்கள்.. இரண்டு மாதம் முன்னால் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இந்த தம்பதி கொலை பயம் பற்றி புகார் செய்தார்கள். ஆனால் போலீஸ் புகாரை வாங்கவில்லை.
-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அல்லது போலீசின் அராஜகமா? அவர்களை சட்டம் அணுகுமா?
  • சட்டத்தை மட்டம் தட்டியவர்கள் யார்? இத்தகைய படுகொலைகளை தடுக்க எண்ணி ஒரு கோடி பெண்கள் அக்காலத்து அமைச்சர். ப.சிதம்பரத்திடம் ஒரு மனு கொடுத்தார்கள். தோழர்.பிருந்தா காரட்டும், தேசீய மகளிர் ஆணையமும், சட்ட ஆணையமும் பரிந்துரைத்தனர். என்ன நடந்தது? உரித்த வாழைப்பழமாக சட்ட ஆணையம் ‘Prohibition of Unlawful Assembly Interference with freedom of Matrimonial alliance’ என்ற சட்டவரைவை அளிக்க, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அலசி ஒரு மசோதாவை மாநிலங்களின் கருத்து கேட்க, அனுப்பி வைத்தது, காருண்யம் பொழிந்த ப.சி. யை உள்ளடக்கிய மத்திய அரசு.
  • -இது பெரிய சமூகத்தின் சாதி வெறியா? பிரச்சனையை மறைத்து வைக்கும் சூழ்ச்சியா? ஏன் இந்த தட்டாமாலை?
  • கருணாகரமான [தவறாக நினைக்க வேண்டாம்! ‘எல்லாம் ஒரு குட்டையில் அழுகிய மட்டை தான் – காமராசர்’.] தமிழ் நாட்டு அரசு 23 03 2016 வரை மவுனம் -இது சின்ன/பெரிய சமூகத்தின் சாதி வெறியா? இல்லை அரசு கொள்கையா?

வரிந்து, வரிந்து பக்கம் பக்கமாக சாதிவெறி பற்றி எழுதும் நண்பர்கள் ஏன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் Vicarious pleasure என்பார்கள். தமிழில் ‘சொல்லி மகிழ்வது’ எனலாமோ? எனக்கு இரண்டு மொழியும் தெரியாது.

இணைய பெருமக்களே! நமக்குள் பேசி பயனில்லை.களத்தில் இறங்குங்கள். சமயம் பார்த்து விண்ணப்பிக்கிறேன். என்னால் ஆனதை செய்து வருகிறேன். அது மற்றவர்களின் ப்ரைவசியை பாதிக்கக்கூடாது என்பதால், இப்போதைக்கு முற்றுப்புள்ளி.
-#-
நன்றி: ஆனந்த விகடன்: 23 03 2016
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com