Wednesday, August 10, 2016

இன்னம்பூரான் பக்கம் [10] என்றோ ஒரு நாள்: திக்குத்தெரியாத காட்டில்



இன்னம்பூரான் பக்கம் [10] என்றோ ஒரு நாள்: திக்குத்தெரியாத காட்டில்....


Wed, Aug 10, 2016 at 2:16 PM

Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

இன்னம்பூரான் பக்கம் [10]: என்றோ ஒரு நாள் -1: திக்குத்தெரியாத காட்டில்....


Wed, Aug 10, 2016 at 2:10 PM


இன்னம்பூரான் பக்கம் [10]
என்றோ ஒரு நாள் -1
திக்குத் தெரியாத காட்டில்…

பிரசுரம்:  http://www.vallamai.com/?p=71034

இன்னம்பூரான்

ஆகஸ்ட் 8, 2016

அவரவரது வாழ்க்கையின் உள்ளுறை அற்புதமானது. கண்ணுக்குள் நிற்கும் மறைமூர்த்தியான அதன் அடர்த்தி பெரிது. பரிமாணமோ பரந்த வானம் போல் எல்லையற்றது. ஆழமோ, ஆழ்கடலை விட, ஏன்?, அதலபாதாளத்தையும் மிஞ்சியது. அதன் வளர்த்தியோ ஒளியின் வேகத்தைத் துச்சமாக மதிக்கும் விரைவுடன் ஓங்கி உலகளக்கும். பிரபஞ்சத்தை அளவெடுக்கும். இத்தனையும் பொருந்திய கோடானுகோடி மானிடர்களில் பெரும்பாலோர் எல்லாம் அறிவர்;அறிந்துகொண்டதாகப் பறை சாற்றுவர். ஆனால் தனது உள்ளுறை அறியார்; அந்தோ பரிதாபம்! தன் அறியாமையையும் அறியார்.
எத்தனை வாழ்க்கைகள் அவ்வாறு தோன்றி, மறைந்து தொலைந்தனவோ? அது ஒருபுறம் நிற்க, இந்தத் தொடர் ஏதோ நான்தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டேனோ என்ற இறுமாப்புடன் எழுதப்படுவதல்ல. தரணிதனில் பிறந்த உயிரினங்கள் ஒன்று கூடத் தன்னிச்சையில் உரு எடுத்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் அரிதான நிகழ்வுகள். முத்துக்குளிப்பது போல் பல்லாயிரம் சிப்பிகள் கருவுற்ற போதிலும், ஒருபிடி அளவுகூட நன்முத்துக்கள் கிடைப்பது அரிது. அவற்றில் ஆறறிவு படைத்த மனித இனத்தை நான் மற்ற உயிரனங்களை விட உன்னதமானது என்று கருதாவிட்டாலும், தன் உள்ளுறையைச் சற்றே அறிந்தது போல் நடந்து கொண்ட விவேகமான அணில், பூனை, நாய், யானை, புலி, காகம், நாரை, முதலை ஆகிய சில பிராணிகளுடன் சிறிதளவு பழக அனுபவம் பெற்ற நான், மனிதனின் சிந்தனை வளம் பற்றிச் சிறிதளவு  அறிவேன்.
கல்வி மேன்மை தரும்; ஓதாமல் ஒருநாளும் இருந்ததில்லை என்பதால், பல சான்றோர்களின் உள்ளுறைச் செய்திகள் எனக்குக் கிடைக்கும் வாய்ப்பே ஒரு நன் நிமித்தம்; கொடுப்பினை. ஆகவே, இந்தத் தொடரில் பெரும்பாலும் சான்றோர்களின் உள்ளுறை பற்றிச் சற்றே அறிந்து கொண்டவை பகிரப்படலாம், வாசகர்களில் சிலராவது, இது வரவேற்கத்தக்கது என்று நினைத்தால். இல்லாவிடிலும், நட்டம் ஒன்றுமில்லை. நான் அனுபவிப்பது பெற்றுக்கொள்வது, பெரும் அதிர்ஷ்டம் அன்றோ! பீடிகை முற்றிற்று.
[தொடரக்கூடும்]
***
சித்திரத்துக்கு நன்றி: https://c1.staticflickr.com/3/2296/2576128617_1f9982a0b3_z.jpg?zz=1
***
படித்தது: இதுவும் அதுவும்
-#-

இன்னம்பூரான்